கடந்த ஏப்ரல் 18ம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கரூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்குப்பெட்டிகள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது, வரும் மே 19ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதையொட்டி அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூர் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடனான கருத்து கேட்பு கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அன்பழகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாக்கு எண்ணும் அறைக்குள் யாரும் நுழைந்து விடாதபடி அமைக்கப்பட்டுள்ள கம்பி வலை மற்றும் துணை ராணுவம் மற்றும் காவலர்களின் சுழற்சி முறை பாதுகாப்பு பணி, சி.சி..டி.வி. கேமரா கண்காணிப்பு உள்ளிட்டவற்றை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட வேட்பாளர்களும், அந்தந்த கட்சியின் முகவர்களும் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து கரூர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது,
கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாகவே செயல்பட்டு வருகின்றனர். மாவட்ட தேர்தல் அதிகாரி தொலைபேசியில் என்னிடம், தேர்தலை நான் நிறுத்துவேன் என கூறும் அளவுக்கு மோசமான நிலை இருந்தது. மாவட்ட அதிகாரியே இப்படி இருக்கும் போது அவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் பாதுகாப்பு குறைபாடுடன் இருப்பது ஆச்சர்யம் இல்லை. வாக்கு எண்ணிக்கையை இவர்கள் தலைமையில் நடத்தக்கூடாது. வாக்கு எண்ணிக்கையை இந்த அதிகாரிகள் நடத்தினால் நியாயமாக இருக்காது.
மாவட்ட ஆட்சியர் எங்கள் மீது கொடுத்த பொய் புகாரில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தோம். விசாரணையில் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாருக்கு ஆதாரமாக சி.சி.டி.வி. பதிவைக் காட்ட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் மாவட்ட ஆட்சியர் கூறியது மிகப்பெரிய பொய் குற்றச்சாட்டு என்பதும், தேர்தல் அதிகாரிகளின் வழக்கத்தில் இல்லாத அளவில், ஒரு தேர்தல் அதிகாரி பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து, வேட்பாளர் மீதும், முகவர் மீதும் பொய் புகார் அளித்துள்ளார். எவ்வளவு தூரம் அவர் ஆளும் கட்சியின் ஊதுகுழலாக கரை வேட்டி கட்டாத மாவட்ட செயலாளராக செயல்பட்டிருக்கிறார் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின்மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. புகாரை உடனே ஏற்றுக்கொண்டு அதிகாரியை அனுப்பி விசாரணை நடத்தியிருக்கின்றனர். மாவட்ட ஆட்சியரும், கண்காணிப்பாளரும் ஒரு தலைப்பட்சமாக நடந்து வருவதால் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதையும் பி.எஸ்.எப். படை வீரர்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர வேண்டும். மாவட்ட ஆட்சியரை மாற்றி விட்டு நியாயமான நேர்மையான ஒரு அதிகாரியை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றார்.