தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் சவார்க்கர் பிறந்த தினமான இன்று (மே28) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்கள் முன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனப் பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சபாநாயகரின் இருக்கை அருகில் செங்கோல் ஒன்றும் நிறுவப்பட உள்ளது.
பிரதமர் மோடி நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைப்பது, குடியரசுத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பாதது போன்ற காரணங்களுக்காக திமுக, விசிக, மதிமுக உட்பட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் திறப்பு விழாவினை புறக்கணிப்பதாக கூட்டாக அறிவித்தன. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "நாட்டின் முதல் குடிமகனாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தையே மோடி அரசு சீர்குலைத்துவிட்டது; குடியரசுத் தலைவர் ஒப்புதலின்றி நாடாளுமன்றமே செயல்பட முடியாது என்ற நிலை உள்ளபோது, அவர் இல்லாமல் புதிய நாடாளுமன்றத்தை திறப்பது அரசியலமைப்பை மீறும் செயல்" என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பிரதமர் மோடி நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க ஆணையிடக் கோரியும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறக்க ஜனாதிபதியை அழைக்காததின் மூலம் அரசியல் சட்டத்தை மக்களவைச் செயலகம் மீறி விட்டதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரசிம்ஹா, மகேஸ்வரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை’ எனச் சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தனர். அதேபோல், மனுதாரர் தான் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார்.
இந்நிலையில் இன்று நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவினை புறக்கணிப்பதாக 20 கட்சிகள் அறிவித்துள்ளன. இந்திய தேசிய காங்கிரஸ் (INC), திராவிட முன்னேற்றக் கழகம் (DMK), ஆம் ஆத்மி கட்சி (AAP), சிவசேனா (UBT), சமாஜ்வாதி கட்சி (SP), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, கேரள காங்கிரஸ் (மணி) ஆகியவை அடங்கும்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி), திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஜனதா தளம் (ஐக்கிய), தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாடு, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
அதேபோல் இவ்விழாவில் கலந்துகொள்ள 20 கட்சிகள் ஆர்வம் தெரிவித்துள்ளது. சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி), யுவஜன ஷ்ரமிகா ரித்து காங்கிரஸ் கட்சி (ஒய்எஸ்ஆர்சிபி), தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி), பிஜு ஜனதா தளம் (பிஜேடி), சிவசேனா (ஷிண்டே பிரிவு), அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), தேசிய மக்கள் கட்சி (NPP), தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP), சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM), மிசோ தேசிய முன்னணி (MNF), ஜனநாயக ஜனதா கட்சி (JJP), அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் (AJSU), ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி (RLJP), குடியரசுக் கட்சி பார்ட்டி ஆஃப் இந்தியா (ஆர்பிஐ), அப்னா தளம் (எஸ்), இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் (ஐஎம்கேஎம்கே), தமிழ் மாநில காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி-ராம் விலாஸ்), பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி), ஐடிஎஃப்டி (திரிபுரா), போடோ மக்கள் கட்சி (BPP), பாட்டாளி மக்கள் கச்சி (PMK), மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி (MGP), மற்றும் Asom Gana Parishad (AGP). மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் இவ்விழாவில் பங்கேற்க இருப்பதாகத் தனது கருத்தினை அறிக்கையாக வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.