
விழுப்புரம் மாவட்ட பிஜேபி கட்சித் தலைவராக இருப்பவர் கலிவரதன். இவர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதி அதிமுக கூட்டணியில் பிஜேபி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் மீது திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவரது மனைவி (30) செல்லம்மாள் என்பவர் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் வேட்பாளர் கலிவரதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பத்துப் பேர் தங்கள் வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் செய்ததாக புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து செல்லம்மாள் தனது புகாரில், “கடந்த 8ஆம் தேதி காலை 11 மணிக்கு எனது கணவர் பிரபுவை செல்ஃபோனில் தொடர்பு கொண்டார் பாஜக வேட்பாளர் கலிவரதன். அப்போது என் கணவரிடம் தேர்தல் எப்படி நடந்தது, வாக்குப்பதிவு அன்று உங்கள் ஊரில் எந்த அளவுக்கு வாக்குகள் பதிவானது, அதில் நமது தாமரை சின்னத்திற்கு அதிக வாக்குகள் விழுந்தனவா என்று விசாரித்தார். அப்போது எனது கணவர் தாமரைக்கு ஓட்டுக்கள் குறைவாகத்தான் பதிவாகியிருக்கும் என்றார். இதைக் கேட்ட கலிவரதன் செல்ஃபோனிலேயே எனது கணவரை ஆபாசமாக திட்டினார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு எனது கணவர் வெளியே சென்றுவிட்டார்.
இந்த நிலையில், அன்று இரவு 8.30 மணி அளவில் கலிவரதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் கொண்ட கும்பல், கையில் கம்பு தடிகளுடன் எங்களது வீட்டிற்குள் புகுந்து என் கணவரைத் தாக்குவதற்கு தேடினார்கள். அவர் அங்கு இல்லை. அப்போது, அவர்களை நான் தடுக்க முயன்றபோது என்னை ஆபாசமாக திட்டி, தடியைக் காண்பித்து அடித்துக்கொன்றுவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்து விட்டுச் சென்றனர்.” இவ்வாறு செல்லம்மாள் அவரது புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கலிவரதன் மற்றும் அடையாளம் தெரியாத அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 147, 294, 506 (1)ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர்.
கும்பலாக கூடி அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து, ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு கடந்த 8ஆம் தேதி திருக்கோவிலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து பிஜேபி வேட்பாளர் கலிவரதன் தலைமையில் அதிமுக, பாமக மற்றும் பிஜேபி கூட்டணிக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து முக்கிய கட்சி பிரமுகர்களுடன் விபரங்கள் சேகரித்துள்ளனர். அந்தக் கூட்டத்திற்கு வருமாறு சிறுவனூர் பிரபுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் அந்தக் கூட்டத்திற்கு செல்லவில்லை என்றும் மேலும் தேர்தல் சமயத்தில் வாக்குகளைப் பெறுவதற்கானபரிவர்த்தனை கிராமம்தோறும் நடைபெற்றுள்ளது. அதைக் கட்சியினர் முறையாக செய்துள்ளனர் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் தொகுதி வாக்குகள் பிஜேபியின் தாமரை சின்னத்திற்குஅதிக அளவில் கிடைக்கவில்லை என்ற கோபம்தான் இந்தக் கொலை மிரட்டல்புகாருக்கு காரணமென்று அதிமுக, பாமக,பிஜேபி ஆகிய கூட்டணிக் கட்சியினர் கூறுகின்றனர். இதன் அடிப்படையிலேயே பிரபுவின் வீட்டுக்குள் புகுந்து மிரட்டல் விடுத்துள்ளனர். பிஜேபி வேட்பாளர் கலிவரதன், முன்பு பாமக சார்பில் முகையூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றிபெற்றவர். அதன் பிறகு பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து, தற்போது பிஜேபி கட்சியில் உள்ளார். மேலும், இவர் எம்எல்ஏவாக இருந்தது முதல் தற்போது வரை அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகள் மூலம் பரபரப்பாக பேசப்படும் அளவிற்கு அவரது செயல்பாடுகளும் இருந்து வருகின்றன என்கிறார்கள் தொகுதி மக்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)