அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் ஈபிஎஸ்-இன் ஆதரவாளரான ஜெயக்குமார் நேற்று சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக தான் அன்புமணியை அடையாளம் காட்டியது. தற்போது அதிமுகவை தவறாகப் பேசுவது சரியல்ல எனக் கூறியிருந்தார்.
ஜெயக்குமார் மேலும் பேசியதாவது, “அதிமுக இல்லையென்றால் பாமக இருந்ததே வெளியில் தெரிந்திருக்காது. ஜெயலலிதா கூட்டணி வைத்ததால் தான் பாமகவிற்கு அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு முன் பாமகவிற்கு அங்கீகாரம் கிடையாது. 91ல் பாமக ஒரு தொகுதியில் மட்டும்தான் வென்றது. அதன் பின் மாநிலங்களைவை தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 98ல் ஜெயலலிதா பாமகவுடன் கூட்டணி வைத்ததில் 5 இடங்களை பாமகவிற்கு ஜெயலலிதா கொடுத்தார். அதில் 4 இடங்களில் வெற்றி பெறுகிறார்கள். அதன் பிறகு தான் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது. அன்புமணி ராமதாஸ் இவ்வாறு நன்றி மறந்து பேசினால் யாரும் உங்களை மதிக்கமாட்டார்கள்” எனக் கூறியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்த பாமக வழக்கறிஞர் பாலு, “1996 ஆம் ஆண்டினை ஜெயக்குமார் சற்றே திரும்பிப் பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் அவர்கள் 4 சட்டமன்ற உறுப்பினர்களைத்தான் பெற்றார்கள். தனித்து நின்ற பாமகவும் 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது. 1998ல் ஜெயலலிதா சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கே வந்து கூட்டணி வைத்தார். அதன் காரணமாகத்தான் அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றது.
எப்பொழுதெல்லாம் அதிமுக பின்னடைவை சந்தித்து உயிர் போகும் சூழலில் இருக்கின்றதோ அப்பொழுது அவர்களுக்கு உயிர் கொடுப்பவர்களாக பாமக இருந்துள்ளது. 98ல் பாமக அந்த முடிவை எடுக்கவில்லை என்றால் அதிமுக மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கும்” எனக் கூறினார்.