சென்னை புறநகரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “முதல்வரின் 70ஆவது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் இணைந்து காஞ்சிபுரம் படப்பை கரசங்கால் பகுதியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5 ஆம் தேதி நடத்த உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததில்லை. சென்னை புறநகர் பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கம் தீரும் வகையில் நடத்த இருக்கிறோம்.
தமிழகத்தில் சிறந்த காளைகள் 500 மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் ஒரு காளை உட்பட 501 காளைகள் போட்டியில் பங்கு பெற உள்ளன. மேலும், தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்கள் 300க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
கூடுதல் சிறப்பாக வேறு எங்கும் இல்லாத வகையில் முதல் முறையாக மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் இடம் பெறும் காளைக்கு கார் பரிசாகவும், முதல் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் அனைத்து காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கு முன் பலமுறை ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒருங்கிணைத்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத்தோடு இணைந்து இப்போட்டியை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். 30 ஏக்கருக்கும் மேல் நிலம் உள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகள், காவல்துறை என்ன சொல்கிறதோ அதற்கான ஏற்பாடுகள், கால்நடை மருத்துவர்கள், விளையாட்டு வீரர்களை பரிசோதிக்க மருத்துவர்கள், தேவையான சுகாதார வசதிகள், பார்வையாளர்களுக்கான வசதிகள், காளைமாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தேவையான வசதிகள் செய்துதர திட்டமிட்டு இருக்கிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே அதற்கான வேலைகளை துவங்கியுள்ளோம்.
ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு இதற்கான பணிகள் தொடங்கி விட்டது. இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால் தேவையான ஏற்பாடுகளைச் செய்து முடிப்போம். சென்ற ஆண்டு போட்டியை நடத்துவதற்கு திட்டமிட்டோம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவற்றால் நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு தமிழக முதலமைச்சரின் பிறந்த நாளை ஒட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஆளுநராகப் பொறுப்பேற்ற துவக்கத்திலிருந்து தவறான கருத்துக்களை ஆளுநர் தெரிவித்து வருகிறார். நாங்கள் ஆட்சியில் இருப்பதால் ஆளுநரை மதிக்கிறோம். ஆனால், தமிழ் உணர்வுடன் இருப்பவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டா இருப்பார்கள். மேலும், ஆளுநரைக் கண்டித்து பதாகைகளோ சுவரொட்டிகளோ ஒட்டக்கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்” எனக் கூறினார்.