திருப்பத்தூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இதனால் வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
உடனடியாக அந்த விளம்பரத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டுமென வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் அவரது வீட்டிற்கு சென்று நேரில் கடிதம் கொடுத்துள்ளோம். கண்டிப்பாக பரிசீலனை செய்வார். இல்லாவிட்டால் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
புதிய சினிமா படம் சி.டி.க்களாக வெளியிட்ட போது அதனை எதிர்த்து வணிகர் சங்க பேரமைப்பு குரல் கொடுத்தது. தற்போது வியாபாரிகளை காக்க நடிகர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் நடிக்கக் கூடாது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 37-வது மாநில மாநாடு அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. அதற்கு பிரதமர் மோடியை அழைக்க உள்ளோம். பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை குறைக்க மத்திய மந்திரியிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.