அதிமுகவின் வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் அவர்களின் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை எச் - 3 காவல் நிலையம் பின்புறம் நடந்தது.
இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 44 ஆயிரம் வாக்குகள் தான் வாங்கினார். காங்கிரஸ் வேட்பாளர் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வாங்கினார் எனச் சொல்கிறார்கள். இரண்டு நாட்களாக செய்தி இதுதான். எப்படி ஓட்டு வாங்கினார்கள் என்பதை தொலைக்காட்சியும் காட்டவில்லை. பத்திரிக்கையும் காட்டவில்லை. வருத்தத்துடன் சொல்கிறேன்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை அடைத்து வைத்திருந்தார்கள். காலையில் கொண்டு சென்று அசைவ உணவு கொடுக்கிறார்கள். காலையில் 500 ரூபாய் மாலையில் 500 ரூபாய். நாங்கள் வாக்காளர்களை பார்க்க முடியவில்லை. வாக்காளர்களுக்கு ஆசை வார்த்தை கூறி பண மழை பொழிந்தனர். பணநாயகமா ஜனநாயகமா என்று கேட்டால் பணநாயகமே வென்றுள்ளது. இதனால் பெற்ற வெற்றி தான். இல்லை என்றால் அதிமுக தான் வெற்றி பெற்றிருக்கும். அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் 40,000 மக்கள் கலந்துகொண்டார்கள். அதை பார்த்தவுடன் ஷாக் ஆகிவிட்டனர். 120 இடங்களில் வாக்காளர்களைக் கொட்டகையில் அடைத்து வைத்திருந்தார்கள்” எனக் கூறினார்.