2016இல் திமுக வெற்றிபெற்ற தொகுதி விக்கிரவாண்டி. எம்.எல்.ஏ. ராதாமணி மரணமடைந்ததால், 2019இல் இடைத்தேர்தல் நடந்தது. அதில், திமுகவிடம் இருந்து விக்கிரவாண்டியை அதிமுக கைப்பற்றியது. தற்போது விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ.வாக உள்ளவர் முத்தமிழ்ச்செல்வன். இடைத்தேர்தல் வெற்றியை மீண்டும் தக்கவைத்துக்கொள்வாரா முத்தமிழ்ச்செல்வன் என்றால், சற்று கடினம் என்கிறார்கள் தொகுதிவாசிகள்.
கடந்த இடைத்தேர்தலில் முத்தமிழ்செல்வனை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டவர் கட்சியின் மாவட்டச் செயலாளர் புகழேந்தி. தற்போதைய பொதுத்தேர்தலிலும் அவரையே மீண்டும் வேட்பாளராக களமிறக்கி உள்ளது திமுக. விட்டதைப் பிடிக்க வேண்டும் என்று திமுகவினரும், பிடித்ததை மீண்டும் கைப்பற்ற வேண்டும், விடக்கூடாது என்று அதிமுகவினரும் விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்ற முடிவோடு கங்கணம் கட்டி இறங்கியுள்ளனர்.
திமுக, அதிமுக இரண்டுக்கும் இடையே போட்டி கடுமையாகவே உள்ளது. அதிமுக முத்தமிழ்ச்செல்வனுக்கு, பாமகவினர் இடைத்தேர்தலில் கொடுத்த ஆதரவு தற்போதும் தொடர்வதாலும், அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உதவி, வாக்காளர்களைக் கவர்ந்து இழுக்கும் வகையில் இருக்கும் என்பதாலும் வெற்றி உறுதி என்ற நிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தியோ, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ஆகியோரது ஆதரவு இந்தமுறை வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையோடு ஓட்டு கேட்டு வருகிறார்.
இவர்களோடு சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஷிபா ஆஸ்மி, தினகரனின் அமமுக சார்பில் துரவி ஐயனார் ஆகியோரும் போட்டியில் உள்ளனர். இருந்தும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இடையேதான் பிரதான போட்டி. மற்ற வேட்பாளர்கள் சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே சேதாரம் ஆக்குவார்கள். அதனால் வெற்றிபெறும் வேட்பாளருக்குப் பெரிய பாதிப்பு ஏற்படாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.