அதிமுகவில் கடந்த ஆண்டு ஜுன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்பாபு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது இ.பி.எஸ். சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்ட நிலையில், இந்த மனுக்கள் காலாவதியாகிவிட்டது’ என்று வாதாடினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர், ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என்பது குறித்து நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவு எடுக்கமுடியும் என இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது’ எனத் தெரிவித்தார். மேலும், இந்த மனுவில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ் பாபு, ஓ.பி.எஸ். தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.