திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடக்க கால திமுக முக்கிய பிரமுகர்களுள் ஒருவராக இருந்தவர் முருகையன். திமுக சார்பில் எம்.பி, எம்.எல்.ஏ, திருவண்ணாமலை நகர மன்ற தலைவராக இருந்தவர். கட்சி பதவியிலும் இருந்தவர். அவர் 1920 ஆகஸ்ட் 7ந் தேதி பிறந்தார், 2003 ஜனவரி மாதம் மறைந்தார். அவரின் நெருங்கிய பேரன் முறை உறவினரும், மதிமுகவின் மாநில உயர்நிலை குழு உறுப்பினர் சீனி.கார்த்திகேயன் முயற்சியில், முருகையன் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு, முருகையன் தகவல் அடங்கிய விக்கிபீடியா தளம், தொடர்பான யூ டியூப் சேனல் போன்றவற்றை திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை தொடங்கி வைக்க அனுமதி வாங்கி அவரது வீட்டிற்கு சீனி கார்த்திகேயன் சென்றுள்ளார். அங்கு முருகையன் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற அனைவரும் செருப்பில்லாமல் அஞ்சலி செலுத்தினர்.
வேலு மட்டும் ட்ராக் பேண்ட், டிசர்ட், வாக்கிங் சூ அணிந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வளைத்தளங்கில் வெளியாகி, மூத்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தி இப்படியொரு அவமரியாதை செய்துவிட்டாரே என சில திமுகவினரே நொந்து கொண்டனர்.
அதேநேரத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் இதனை வைத்து விமர்சிக்கவும் தொடங்கிவிட்டார்கள். வேலுவின் வீட்டில்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. அவர் தனது காலணியை கழட்டி வைத்துவிட்டாவது படத்திறப்பு செய்துயிருக்கலாம் இப்படி எதுவுமே செய்யவில்லை. இதிலிருந்தே தெரியவில்லையா அவர் திமுக தலைவர்களுக்கு தரும் மரியாதை என கேள்வி எழுப்புகிறார்கள்.
இது தொடர்பாக காரசாரமாக நடக்கும் முகநூல் விவாதம் ஒன்றில், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மதிமுக சீனி கார்த்திகேயன் தனது கருத்தாக, படத்திறப்பு விழா என்பதே அந்த நிகழ்வில் கிடையாது, அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வது, மறைந்த முருகையன் மீது பெரும் மதிப்பு வைத்து நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்த ஆலோசனைகள் தந்துள்ளார் என கருத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, நகரத்தில் வலிமையாக உள்ள சமுதாயத்தை மோசமாக பேசிவிட்டார் என தகவல் பரவி, தேர்தல் களத்தில் அவருக்கு பெரும் நெருக்கடியை தந்தது. அதே சமுதாயத்தை சேர்ந்த மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும்போது அவமானப்படுத்திவிட்டார் என்கிற சர்ச்சை தற்போது உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.