நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி இதில் உள்ள சத்தியமங்கலத்தில் அ.ம.மு.க. சார்பில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வேட்பாளர் ராமசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது
"நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் படுகர் இன மக்களுக்கு சலுகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் வெற்றி பெற்றால், பச்சை தேயிலை விலை தற்போது கிலோ 17 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. அதை ரூபாய் 30 வரை கிடைக்க நடவடிக்கை எடுப்போம். சுற்றுலா தலமான ஊட்டி செல்வதற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரோப்கார் மற்றும் ஹெலிகாப்டர் சேவை கொண்டுவருவேன். மலை பகுதி மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இத்திட்டத்தை கொண்டுவந்து பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பவானிசாகர் பகுதியில் கமலா ஆரஞ்சு விளைவிப்பதற்கேற்ற சீதோஷ்ண நிலை உள்ளதால் தோட்டக்கலைத்துறை மூலம் கமலா ஆரஞ்சு சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்ட ஆ ராசா 2ஜி வழக்கில் சிக்கி அதிலிருந்து மீண்டு வருவது குறித்த முழு கவனத்துடன் இருந்ததால் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. நேற்று வேட்புமனு பரிசோதனையின்போது ஆ ராசாவின் வேட்பு மனுவை பரிசீலனை செய்த தேர்தல் அலுவலர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையிலுள்ள 2ஜி வழக்கு குறித்த விபரங்களை பத்திரிகைகளில் விளம்பரம் செய்து அதன் விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்" என தெரிவித்தார்.