2013 ஆம் ஆண்டு திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் 2018 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 36 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே ஆட்சியில் இருந்து வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்தது.
இந்நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் திரிபுராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளது.
2018 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 16 இடங்களில் வெற்றி பெற்றிருந்ததும் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியாகத் திரள., எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சில கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பாஜகவிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.