ஒரு வழியாக 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. எஞ்சிய ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை களம் இறக்கிய திமுக, ஜெட் வேகத்தில் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது. ஆனால், அதிமுகவில் இன்னும் வேட்பாளரே அறிவிக்கவில்லை. இன்று (19-04-2019) சேலத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றார்.
இதனிடையே, ஓட்டப்பிடாரத்தில் 'சீட்' யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து நிர்வாகிகள் சிலரிடம் பேச்சு கொடுத்தோம். "முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், ஆவின் சேர்மன் சின்னத்துரை ஆகிய 2 பேர் எப்படியாவது 'சீட்' பெற்றுவிட வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றனர். அமைச்சர் கடம்பூர் ராஜூ சப்போர்ட் இருக்கிறது என்பதால், நிச்சயம் நமக்குத்தான் சீட் என்ற நினைப்பில் சின்னத்துரை அவரையே சுற்றி வருகிறார். இருந்தும் யாருக்கும் செலவு பண்ணமாட்டார் என்றனர்" கட்சி நிர்வாகிகள்.
அதே நேரத்தில் மாஜி எம்.எல்.ஏ. மோகன், தமக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சப்போர்ட் இருப்பதால் இதை எல்லாம் தலைமை கவனத்தில் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். இடைத் தேர்தல் தானே நடக்குது, கட்சி தலைமை பணம் கொடுக்கும். அதனால், கரை சேர்ந்திடலாம் என்பது அவரது கணிப்பு.
விளாத்திகுளத்தில் கடம்பூர் ராஜூ ஆதரவாளர் சின்னப்பனுக்கு சீட் கொடுத்ததால், மாஜி எம்.எல்.ஏ. மார்க்ண்டேயன் சுயேச்சையாக களம் இறங்கி ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார். அதேபோல், ஓட்டப்பிடாரத்திலும் வந்துவிடக்கூடாது என்பதில் அதிமுக தலைமை தீவிர ஆலோசனையில் இருக்கிறதாம். அதேபோல், தென்காசி தொகுதியில் அதிமுகவினர் தமக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என எடப்பாடியிடம் மனம் புழுங்கி இருக்கிறார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி. ஓட்டப்பிடாரம் அவரது சொந்த தொகுதி என்பதால், நடக்கும் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு புதிய தமிழகத்தின் ஒத்துழைப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எனவே, புதிய தமிழகத்தோடு அனுசரித்து போகிற, அதே நேரத்தில் செல்வாக்கு உள்ள நபரை களத்தில் இறக்க ஆளுங்கட்சி ஆலோசித்து வருவதாக தகவல் கசிகிறது.