தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலேயே, 'ஸ்டாலின் வாழ்க; உதயசூரியன் ஒழிக' என அதிரடி கோஷம் எழுந்திருப்பது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
"ஆளுங்கட்சி மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான குமரகுருவுடன் திருவெண்ணெய்நல்லூர் தி.மு.க கிழக்கு ஒ.செ துரைராஜும், கள்ளக்குறிச்சி தி.மு.க மா.செ உதயசூரியனும், நெருக்கமாக இருப்பதாகவும் இவர்களின் அனுசரணையால்தான் குமரகுரு மூன்று முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்றும் அந்தப் பகுதி தி.மு.க.வினர் கோபமாக இருந்துள்ளனர்.
இந்த விவகாரத்தை கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் சொல்வதற்காக அவர்களில் சிலர் அறிவாலயத்துக்கு வந்துள்ளனர். அங்கே தி.மு.க தலைவர் ஸ்டாலினைப் பார்த்ததும், 'ஸ்டாலின் வாழ்க' என்றும் 'மா.செ. உதயசூரியன் ஒழிக' என்றும் கோஷம் போட்டு எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.
இதுபற்றி தி.மு.க சீனியர்களிடம் கேட்டபோது, "உதயசூரியனும் துரைராஜும் நீண்டகால தி.மு.க.வினர். அவர்களை சந்தேகப்படுவது தவறானது. அவர்களைப் பிடிக்காத சிலர் அவருக்கு எதிராகக் கோஷம் போட்டுள்ளளனர். அவர்களை சமாதானம் செய்துவிடுவோம்" எனத் தெரிவித்தனர்.
கொங்கு மண்டலத்திலும் இப்படி ஆளுந்தரப்பினருக்கு ஆதரவாக இருக்கும் தி.மு.க மா.செ.க்கள், கட்சிக்காக உழைக்கும் வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட தொண்டர்களை மதிப்பதே இல்லை என்று புகார்கள் அறிவாலயத்தில் குவிந்துள்ளது. ''மாவட்ட - ஒன்றிய நிர்வாகிகளோடு மு.க. ஸ்டாலின் ஆலோசித்த பிறகாவது விடிவு பிறக்குமா" என்று தி.மு.கவினர் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.