Skip to main content

"ஒற்றை தலைமை வேண்டும்" - ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம்! 

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

"Have a single leader" - OPS, EPS supporters

 

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந் தேதி  சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. வழக்கமாக பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

 

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் 150 பேர் பங்கேற்றனர்.

 

பொதுக்குழு கூட்டத்தில் யார்-யாரை பேச அழைப்பது, என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதித்தனர். இந்த முறை கூடும் பொதுக்குழுவில் ஆட்சியை இழந்ததற்கான காரணம் குறித்து பலர் கண்டிப்பாக பேசுவார்கள். அது மட்டுமல்ல சசிகலா விவகாரம் குறித்தும் கருத்து மோதல்கள் ஏற்படும். ஒற்றை தலைமை கோஷத்தை யாராவது எழுப்பினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

 

மாவட்டச் செயலாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி 'மினிட்' புத்தகத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. தற்போது அ.தி.மு.க.வில் வழிகாட்டுதல் குழு உள்ளது. இந்த குழுவுக்கு பதிலாக உயர் மட்டக்குழு உருவாக்கப்படக் கூடும் என தெரிகிறது. சசிகலா ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் நுழைவதை தடுக்க அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் கூட்டம் நடைபெற்ற தலைமை கழகத்திற்கு வெளியே அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக் கோரி தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. அலுவலகம் முன்பு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போட்டி கோஷம் எழுப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்