காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடியவில்லை. அதற்குள்ளாக அவசரமாக கருத்துக்கூற அவசியம் இல்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு. தூக்கத்திலும் சரி, தூங்கி எழுந்தபின்பும் சரி இதைத்தான் நாங்கள் சொல்லுவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை ஓட்டேரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பட்சத்தில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?
ஜெயக்குமார்:- காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கவேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. அந்த காலக்கெடுவும் முடியவில்லை. இன்னும் 14 நாட்கள் உள்ளது. அதற்குள்ளாக அவசரமாக கருத்துக்கூற அவசியம் இல்லையே...
இதுதான் எங்கள் நிலைப்பாடு. தூக்கத்திலும் சரி, தூங்கி எழுந்தபின்பும் சரி இதைத்தான் நாங்கள் சொல்லுவோம்.
கேள்வி:- மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறதே?
ஜெயக்குமார்:- நமது எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை 10 நாட்கள் முடக்கி வைத்துள்ளனர். பாராளுமன்றம் வெளியேயும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. காவிரி விவகாரத்தில் கடுமையாக போராடி வரும் இயக்கம் அ.தி.மு.க. மட்டும் தான். எனவே வழங்கப்பட்ட தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தீர்ப்பை அமல்படுத்த செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் தான் தரவேண்டுமே தவிர, இந்த விவகாரத்தில் ராஜினாமா செய்வது சரியில்லை. அது தேவையும் இல்லை.
கேள்வி:- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
ஜெயக்குமார்:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாவிட்டால்... என்ற கேள்வியே வேண்டாம். நேர்மறையான நம்பிக்கையான எண்ணங்கள் தான் வேண்டும். அந்த நம்பிக்கை அடிப்படையில் தான் நமது வாதங்களை அழுத்தம் திருத்தமாக முன்வைத்திருக்கிறோம்.
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நிலைப்பாடு என்பது கட்சியின் கொள்கை முடிவு. இதை நான் மட்டும் சொல்லிவிடமுடியாது. சரியான நேரத்தில் என்ன முடிவுகளை அறிவிப்பது? என கட்சி முடிவு செய்யும். தனிப்பட்ட யாரும் கருத்துக்கூற முடியாது. சரியான நேரத்தில் அந்த முடிவு வெளியாகும். இவ்வாறு கூறினார்.