






சென்னை சூளைமேடு கில் நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பங்கேற்று திறந்து வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார். அவருடைய கருத்துக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரும் அவருடைய பதவியை ராஜினாமா செய்து விட்டார். காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவர் தேர்தலின் போது குடியரசுத் தலைவரின் நிறம் மற்றும் தோல் ஆகியவற்றின் காரணமாகத்தான் வாக்களிக்கவில்லை எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.
அது ஒரு கொச்சையான குற்றச்சாட்டு. தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்ற மோடியின் பேச்சு என்பது ஆசை, பேராசை. தமிழ்நாட்டில் காங்கிரஸும், தி.மு.க.வும் ஒற்றுமையாக உள்ளது.
39 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெறும். நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண விவகாரத்தில் அது கொலையா தற்கொலையா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை தொடங்கி ஓரிரு நாட்களே ஆவதால் அது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. நிச்சயமாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். ஜெயக்குமார் மரண விவகாரத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக கருத முடியாது” என்று கூறினார்.
படங்கள்: எஸ்.பி.சுந்தர்