இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது துவங்கியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு தமிழில் தனது உரையைத் தொடங்கினார். முன்னதாக ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார். அப்பொழுது சில சட்டமன்ற உறுப்பினர்கள் 'தமிழ்நாடு வாழ்க' எனக் கோஷமிட்டனர்.
தனது உரையை ஆரம்பித்த தமிழக ஆளுநர், 'மதிப்பிற்குரிய பேரவைத் தலைவர் அவர்களே. மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே. மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களே' எனத் தொடர்ந்து பேச, கீழே இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 'தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்காதே... ஆளுநரே வெளியேறு' எனத் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் ஆளுநரின் வார்த்தைகள் தடைப்பட்டு நின்றது.
பின்னர் உரையைத் தொடர்ந்த ஆளுநர், ''சட்டப்பேரவை அலுவலர்களே., ஊடக நண்பர்களே... என் இனிய தமிழக சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம். இந்த மாமன்றத்தில் 23வது ஆண்டிற்கான சட்டமன்ற பேரவையின் முதல் கூடுகையில் என் உரையை ஆற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். என் இனிய தமிழக சகோதர சகோதரிகளுக்கும், இம்மன்றத்தில் உள்ள அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களையும், உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டில் நமது மாநிலத்தில் மகிழ்ச்சியும், வளமும், வளர்ச்சியும் மேன்மேலும் பெருக உளமார வாழ்த்துகிறேன். 'வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல்லுயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோன் உயர்வான்' என்ற அவ்வையின் முதுமொழியைச் சொல்லி என்னுடைய உரையைத் தொடங்குகிறேன்'' என உரையைத் தொடர்ந்தார்.