அரசு வேலை கிடைக்கும் என்று நேரத்தை வீணடிக்காமல், சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற வேண்டும் என திரிபுரா மாநில முதல்வர் பீப்லாப் குமார் தேப் இளைஞர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் உலக கால்நடை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் பீப்லாப் குமார் தேப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது சுயதொழில் தொடங்கவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்படி பேசிய அவர், ‘இளைஞர்கள் அரசு வேலைவேண்டி அரசியல் கட்சிகளுக்குப் பின்னால் ஓடி, தங்களது வாழ்வின் பொன்னான நிமிடங்களை வீணடிக்கிறார்கள். அப்படி நேரத்தை வீணாக்காமல் ஒரு பீடா கடை போட்டிருந்தால் கூட ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.5 லட்சம் பாக்கி இருந்திருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞர் வங்கியில் ரூ.75 ஆயிரத்தை கடனாக பெற்று, கொஞ்சம் முயற்சியை முதலீடு செய்தால் மாதம் ரூ.25 ஆயிரம் அவரால் வருமானம் ஈட்டமுடியும். கடந்த 25 ஆண்டுகளாக இங்கிருந்த அரசியல் கலாச்சாரம் அவர்களுக்கு தடையாக இருந்துவிட்டது. படித்த இளைஞர்கள் விவசாயம், கோழிப்பண்ணை, பன்றிப்பண்ணை போன்ற தொழில்களை செய்தால், தாங்கள் தரம்தாழ்ந்து விடுவோன் என்று நினைக்கிறார்கள்’ என பேசியுள்ளார்.