
விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய மற்றொரு சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது. அப்போது, கோயிலில் பட்டியலின மக்கள் சென்று சாமி தரிசனம் செய்ய கடந்த பிப்ரவரி 20ஆம் தேது உத்தரவிடப்பட்டது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கோயில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன் ஆஜரானார். அப்போது அவர், மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் காலை 6 மணி முதல் 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
தமிழக அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, திரெளபதி கோயிலில் அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த யாரேனும் முயன்றால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தார்.
இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு திரெளபதி அம்மன் கோயில் இன்று (17-04-25) திறக்கப்பட்டுள்ளது. மேல்பாதி கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய இன்று கோயில் திறக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி கோயிலில் ஏற்கெனவே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. இருப்பினும், இன்று கோயில் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படும் திரெளபதி அம்மன் கோயிலில், இன்று காலை முதல் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.