
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (16-04-25) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “ஆதி திராவிட மக்கள், பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், விளிம்பு நிலை மக்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என குரலற்றவர்களின் குரலாக இருக்கும் என்று தான் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று வரலாற்று சிறப்புமிக்க நாளாக அமைந்திருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் நலன்களின் அக்கறையோடு பல்வேறு முன் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நாம், இன்றைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு சட்ட முடிவுகளை அறிமுகப்படுத்தப் போகிறோம்.
மாற்றுத் திறனாளிகள் என்ற சொல்ல கொண்டு வந்தவர் முன்னால் முதல்வர் கலைஞர் தான். அந்த அடிப்படையில் தான் நானும் செயல்பட்டு கொண்டிருக்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன், இந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.667 கோடியாக இருந்தது. ஆனால், இந்த நிதியாண்டில் ரூ.1,432 என இரண்டு மடங்காக உயர்த்தி இருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு கருணை அடிப்படையில் மட்டுமல்ல, உரிமை அடிப்படையிலும் நாம் திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அரசு உயர்த்துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு ஊக்கத்தொகை வழங்கி வருகிறோம். அரசு பணியாளர்களுக்கான தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கென நடைமுறைப்படுத்தபட்ட வரும் 4% இட ஒதுக்கீடு மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 493 மாற்றுத் திறனாளிகள் அரசு பணியை பெற்றுள்ளார்கள்.
இதற்கெல்லாம் மகுடம் வைப்பது போல், மாற்றுத் திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும். 12,000 மாற்றுத் மாற்றுத் திறனாளிகளுக்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும். கடைக்கோடியில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் வாழும் ஊர்களில் இதன் மூலம் மரியாதை கிடைக்கும். உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களுடைய உரிமைகளை நிலைநாட்ட திராவிட மாடல் அரசு உறுதியோடு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கூடிய வகையில் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தக்க சட்ட முடிவுகள் எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, அந்த சட்ட வடிவுகளை எடுப்பதில் நான் வாழ்நாள் பெருமை அடைகிறேன்.
கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும் உரிமைகளையும் சமமாக பெறுவதற்கு சட்ட முன்வடிவுகள் வழிவகுக்கும். இதனை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994, தமிழ்நாடு நகர்புற ஊராட்சி சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழிந்து சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் இந்த அவைக்கு வழங்குகின்றேன். தற்போது, நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட் உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் ஆவார்கள். ஆனால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,912 மாற்றுத் திறனாளிகள் கிராம பஞ்சாயத்துகளிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள்” என அறிவிப்பை வெளியிட்டார்.