
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். மற்றொரு புறம் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பாஜகவுடன், அதிமுக மீண்டும் கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (16.04.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட்டணி அரசு அமைப்போம் என்று கூறப்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளதே? எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “கூட்டணி ஆட்சி அமைப்பதாக அமித்ஷா கூறவே இல்லை. ஆட்சியில் அதிமுக - பாஜக கூட்டணி அமையும் என்று தான் கூறினோம். டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என அமித்ஷா தெளிவாக கூறினார். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், அது எங்கள் விருப்பம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு நயினார் நாகேந்திரன், “கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுத்துக்கொள்வார்கள். கூட்டணி குறித்துப் பேசியது அகில இந்தியத் தலைமை. எனவே இது தொடர்பாகவும் அகில இந்த தலைமை பேசும்” எனத் தெரிவித்தார். மேலும் கூட்டணி ஆட்சியில் இடம்பெறும் நோக்கத்தோடு பாஜக உள்ளதா? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு நயினார் நாகேந்திரன், “அது பற்றி நான் கருத்துச் சொல்ல முடியாது” எனப் பேசினார்.