
சிதம்பரம் அருகே உள்ள மேல மூங்கிலடி வெள்ளாற்றங்கரையில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் கொலை செய்து உளளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாலகணபதி(28). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நண்பர் புவனகிரி அருகே உள்ள பூதவராயன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வினோத் குமார் (25). இவர், தற்பொழுது குடும்பத்துடன் தனது பாட்டி வீடான மேலமூங்கிலடி கிராமத்தில் வசித்து வருகிறார். பாலகணபதியை, வினோத் குமார் தனது வீட்டிக்கு அடிக்கடி அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில், வினோத் குமார் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்குச் சென்று வினோத் குமாரின் மனைவியை பாலகணபதி அடிக்கடி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தனது கணவர் வினோத் குமாரிடம் அந்த பெண் கூறி மனவேதனை அடைந்துள்ளார்
இந்த நிலையில், நேற்று (16-04-25) இரவு வினோத் குமார், தனது நண்பர்கள் ஸ்ரீராம் மற்றும் சிலருடன் சேர்ந்து மது குடிப்பதற்காக பால கணபதியை அதே பகுதியில் வெள்ளாற்றுகரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அவர்கள் மது குடித்து உள்ளனர். அப்போது வினோத் மற்றும் அவரது நண்பர்கள், போதையில் இருந்த பாலகணபதியை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் மற்றும் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலை செய்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை எதற்காக நடைபெற்றது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.