Skip to main content

“தாத்தா தேசத்துரோக வழக்கில் கைது செய்கிறார்; பேரன் உறவாடுகிறார்” - அண்ணாமலை குற்றச்சாட்டு

 

annamalai talk about rahul gandhi and bharat jodo yatra

 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமைப் பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) எனும் பெயரில் இந்தியா முழுவதும் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் தொடங்கிய தேச ஒற்றுமைக்கான நடைபயணம் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைக் கடந்து டெல்லியை அடைந்துள்ளது.

 

இதனிடையே ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை, பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லியைத் தொடர்ந்து ஒற்றுமை பயணம் நாளை காஷ்மீரில் நுழையவுள்ளது. அப்போது ராகுல்காந்தியுடன் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கலந்துகொள்ள உள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்துப் பேசியுள்ளார். "பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்தியாவை யாரெல்லாம் பிரிக்கிறார்களோ அவர்களுடன் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் ராகுல்காந்தியுடன் ரா(RAW) அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.டவுலட் என்பவர் கலந்துகொண்டிருந்தார். அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் துராணியுடன் இணைந்தது ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். மேலும், டவுலட் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களுடன் ராகுல்காந்தி நடந்து செல்கிறார். 

 

நாளைக்கு உமர் அப்துல்லாவுடன் பயணம் மேற்கொள்கிறார். ஆனால் 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி அப்போதைய பிரதமரும் ராகுல் காந்தியின் கொள்ளுத்தாத்தாவுமான நேரு, உமர் அப்துல்லாவின் தாத்தா ஷேக் அப்துல்லாவை தேசத்துரோக வழக்கில் கைது செய்து கொடைக்கானலில் சிறை வைத்திருந்தார். ஆனால், இன்று அவரது பேரனுடன் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறார்" என்று தெரிவித்தார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !