அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 35 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காலை முதலே மக்கள் மெரினாவில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் கூடி நினைவஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.
முதலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார். இதன் பின் ஈபிஎஸ் தரப்பின் சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதன் பின் ஓபிஎஸ் தரப்பும் தனியாக உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து, சசிகலாவும் அமமுக பொதுச்செயலாளர் தினகரனும் எம்ஜிஆரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக இருந்த முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமி தரப்புடன் வராமல், தனியாக வந்து மரியாதை செலுத்தியது அவர் எடப்பாடி அணியில் இருந்து விலகுகிறாரா என்பது போன்ற பல்வேறு விமர்சனங்களையும், பல யூகங்களையும் எழுப்பியுள்ளது. இதன் காரணமாக ஈ.பி.எஸ் தரப்பினர் சற்று அதிர்ச்சியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
முன்னதாக அதிமுக பொதுக்கூட்டத்தில் பாஜக திமுகவுடன் கூட்டணி வைக்கும் என சி.வி.சண்முகம் கூறியது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்ப அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து விளக்கமளித்தார்.