ஈரோடு மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஈரோடு மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் கலந்து கொண்டபின் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ““இப்போது முதல்கட்டமாக படிவம் வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இந்த பணிகள் வேகமாக நிறைவேறி வருகிறது. இந்த படிவங்களை பூர்த்தி செய்த பின் அடையாள அட்டைகள் அதிமுக சார்பில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் நிகழ்ச்சியாக உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்வு அமைந்துள்ளது. திருப்புமுனையாக 2024 தேர்தல் அமையும். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை தமிழ் மண்ணில் யாராலும் அசைக்க முடியாது என்ற வரலாற்றை படைக்கும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.
அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். எந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கக் கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அங்கிருக்கும் விவசாயிகளும் பராட்டுக்கூட்டத்தை நடத்தினர். அதிமுக பாஜகவிற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப பிரதமரை சந்திப்பார்” எனக் கூறினார்.