Skip to main content

ஈரோடு கிழக்கு; முக்கிய நிகழ்வுகளும் வேட்பாளர்களின் பேட்டிகளும் - முழு பார்வை

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சார களத்தைப் போலவே வாக்களிக்கும் நாளும் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் முடிந்துள்ளது. தமிழகமே உற்று நோக்கிய ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு காலை சரியாக 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,27,547 வாக்காளர்களில் 1,11,025 ஆண் வாக்காளர்களும், 1,16,497 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர்.

 

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் மொத்தம் உள்ள 238 வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. வாக்காளர்களும் ஆர்வமுடன் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.

 

வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை ஆதாரமாக பயன்படுத்தி வாக்களிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி இன்று வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, பாராளுமன்ற, சட்டமன்ற சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்து வாக்காளர்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.

 

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர 5 கம்பெனி துணை ராணுவத்தினர், 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர 5 ஏ.டி.எஸ்.பி.கள், 15 டி.எஸ்.பி.கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 32 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் போலீசாருடன் கூடுதலாக துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் சுற்றி  200 மீட்டருக்குள் அரசியல் கட்சியினர் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை. 200 மீட்டருக்கு அப்பால் அரசியல் கட்சியினர் இரண்டு சேர் டேபிள் வைத்து அமர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வரும் பொது மக்களுக்கு பூத் சிலீப் வழங்கலாம் ஆனால் அதில் கட்சி சின்னம் எதுவும் இருக்கக் கூடாது. இதை கண்காணிக்கவும் தனியாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருவார்கள். 238 வாக்குச்சாவடி மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என்றார்

 

இந்நிலையில் இன்று காலை முதல் ஈரோட்டில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லை. அமைதியாக தொடங்கிய வாக்குப் பதிவில் வேட்பாளர்கள் வந்து வாக்களித்துச் சென்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன், “எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்றைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதோ அன்றைக்கே மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என என் பெயர் அறிவிப்பதற்கு முன்னாலேயே மக்கள் முடிவு செய்துவிட்டனர். எனவே, மிகப்பெரிய வெற்றியாக இது அமையும். வாக்கு வித்தியாசத்தை என்னால் சொல்ல முடியாது. இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியாக அமையும்” எனக் கூறினார்.

 

அதிமுக வேட்பாளர் தென்னரசு, “தேர்தலில் நான் வெற்றி பெறுவேன் என 100 சதவீத நம்பிக்கை உள்ளது. தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் நன்றாக செய்துள்ளது. வாக்காளர்களுக்கு மை வைப்பதில் ஒரு சில இடங்களில் தவறு நடக்கலாம். அது குறித்து கட்சி தலைமையில் இருந்து அறிக்கை வரும். ஈரோட்டில் எப்போதும் நாகரிகமான அரசியல் இருக்கும். திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்த கட்சியாக இருந்தாலும் சண்டை சச்சரவு வராது” எனக் கூறினார்.

 

வாக்களிக்க வந்த அதிமுக கூட்டணி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த இடைத் தேர்தலில் ஏராளமான பணம், பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக பல்வேறு புகார்கள் உள்ளன. எனவே எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது பணநாயகத்தின் வெற்றியாகும்” எனக் கூறினார். 

 

அதே சமயத்தில் வீரப்பன்சத்திரம் பகுதியில் ஒரே இடத்தில் 6 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தது. இதில் 45வது வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்திய மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் பத்து நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் புது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் செலவின பார்வையாளர் கவுதம் குமார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. முடிவில், ஈரோடு கிழக்கில் மொத்தமாக 74.79% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் ஆண்கள் 82,138 பேரும் பெண்கள் 88,037 பேரும் திருநங்கைகள் 17 பேரும் வாக்களித்துள்ளனர். மார்ச் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதிகாப்பு போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்