ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்குக் கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக, தேமுதிக, த.வெ.க. உள்ளிட்டவை இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன.
இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 08.15 முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதாவது காலை 08. 15 மணியளவில் தபால் வாக்குகள், எண்ணும் பணி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காலை 08.30 மணி முதல் மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணியில் 51 பேர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்புப் பணியில் சுமார் 600 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நான்காவது சுற்று முடிவில் திமுக 7 ஆயிரத்து 975 வாக்குகளும், நாதக 1,984 வாக்குகளும், நோட்டா 435 வாக்குகளும் பெற்றுள்ளன. அதன்படி மொத்தமாக நான்காவது சுற்றின் முடிவின் படி திமுக 30ஆயிரத்து 657 வாக்குகளும், நா.த.க. 5 ஆயிரத்து 954 வாக்குகளும், நோட்டா 1, 204 வாக்குகளும் பெற்றன. இதன் மூலம் திமுக நான்காவது சுற்று முடிவின்படி 24 ஆயிரத்து 703 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். முன்னதாக தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக 197 வாக்குகளும், நாதக 13 வாக்குகளும், நோட்டா 18 வாக்குகளும் பெற்றன. அதே சமயம் 3 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் தபால் வாக்குகளின் நாதக வேட்பாளர் சீதாலட்சுமியை, நோட்டா பின்னுக்குத் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.