பொதுவாக பெரிய நடிகர்கள் படம் என்றாலே அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்து படத்திற்கு செல்வார்கள். ஒன்று அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அந்த படம் அமையும். அல்லது எதிர்பார்ப்புக்கு மேலாக வேறு ஒரு விஷயத்தை சிறப்பாகக் கொடுத்துப் பார்ப்பவர்களுக்குத் திருப்தியைக் கொடுக்கும். இந்த இரண்டு வகையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் எந்த வகை?
அஜித் த்ரிஷா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இருவரும் அவர்களது வாழ்க்கையை மிகவும் அன்னோன்யமாக நடத்தி வருகின்றனர். இவர்களது சந்தோஷமான வாழ்க்கைக்குப் பலனாக த்ரிஷா கர்ப்பமாகிறார். ஆனால் அந்த கர்ப்பம் கலைந்து விடுகிறது. இதனால் இருவருக்குள்ளும் விரிசல் ஏற்படுகிறது. அந்த விரிசல் விவாகரத்து வரை செல்கிறது. த்ரிஷா அஜித்தை விட்டு பிரிந்து அவரது தாய் தந்தை வீட்டுக்கு செல்கிறார். அப்போது கடைசியாக என்னோடு காரில் வா உன்னை உன் வீட்டில் விடுகிறேன் என சொல்லி அஜித் த்ரிஷாவை காரில் கூட்டிக்கொண்டு அஜர்பைஜான் தாண்டி வேறு ஒரு ஊருக்கு செல்கிறார். போகும் வழியில் அர்ஜுன், ரெஜினா கேசன்ட்ரா மற்றும் ஆரவ் குரூப் திட்டம் போட்டு த்ரிஷாவை கடத்தி விடுகின்றனர். அஜித் த்ரிஷாவை தேடி அலைகிறார். அர்ஜுன், ரெஜினா குரூப் ஏன் த்ரிஷாவை கடத்துகின்றனர்? இவர்களிடமிருந்து தன் மனைவி த்ரிஷாவை அஜித் மீட்டாரா, இல்லையா? என்பதே விடாமுயற்சி படத்தின் மீதி கதை.
பிரேக் டவுன் ஹாலிவுட் படத்தின் தழுவலாக இந்த விடாமுயற்சி படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. அந்தப் படத்திற்கும் இந்த படத்திற்கும் சில சின்ன சின்ன விஷயங்களை மட்டும் ஆங்காங்கே நம் தமிழுக்கு ஏற்றார் போல் சற்று பட்டி டிங்கரிங் பார்த்து கதையை வேறொரு கோணத்தில் மாற்றி வித்தியாசமான ஒரு ரோடு த்ரில்லர் படமாக இப்படத்தை கொடுத்திருக்கிறார். அஜித் ரசிகர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்த்து வருவார்களோ அதை கொடுக்காமல் நம் உடன் இருக்கும் அல்லது நமக்கே இப்படியான ஒரு விஷயம் நடந்தால் எப்படி உண்மைக்கு நெருக்கமாக நாம் அதற்கு ரியாக்ட் செய்வோமோ அதேபோல் நாயகனையும் நம் பக்கத்து வீட்டு நபரைப் போல் உண்மைக்கு மிக நெருக்கமாக பிரச்சனையை அணுகும்படியான ஒரு கதாபாத்திரமாகக் காண்பித்து ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் பஞ்சு வசனமும் அனல் பறக்கும் சண்டை காட்சிகளையும் வைக்காமல் மிகவும் எதார்த்தமான காட்சி அமைப்புகள் மூலம் அதனுள் ரசிகர்களுக்கும் ஏமாற்றம் அடையாதபடிக்கு சில சிறப்பான ஸ்டண்ட் காட்சிகளை வைத்து ஒரு பீல் குட் லவ் கலந்த த்ரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குநர். பெரிய நட்சத்திர நாயகனுக்கான மாஸ் எலிமெண்ட்ஸ் எதுவுமே இல்லாமல் எந்த ஒரு எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளாமல் ஒரு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு மட்டும் கொடுத்தால் போதும் என்று நினைத்துக் கொண்டு படம் பார்க்க வருபவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத அயற்சி கொடுக்காத நிறைவான த்ரில்லர் படமாக இந்த விடாமுயற்சி அமைந்திருக்கிறது. முதல் பாதி காதல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த இயக்குநர் போகப் போக மனைவியை தேடும் காட்சிகளை அப்படியே நீட்டித்து இரண்டாம் பாதி முழுவதும் அதையே படரச் செய்து ஆங்காங்கே சில கூஸ்பம் மொமென்ட்கள் கொடுக்கும் ஸ்டண்ட் காட்சிகளை வைத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்.
இரண்டாம் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும், முதல் பாதியிலும் இருந்திருந்தால் இந்த படம் இன்னமும் சிறப்பான படமாக அமைந்திருக்கும். மற்றபடி படம் முழுவதும் எந்த ஒரு இடத்திலும் பெரிதாக திருப்புமுனைகள் எதுவுமே இல்லாமல் மிகவும் பிளாட்டாக செல்வது சற்றே பாதகமாக அமைந்திருக்கிறது. அதேபோல் காட்சி அமைப்புகளும் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அதே கிளிஷேவான காட்சிகளாகவே வருகிறது. கதையும் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அறத பழசான ஒரு கதையாக இருப்பதும் பல இடங்களில் அயர்சியை கொடுத்துள்ளது. திரைக்கதையும் எந்த ஒரு இடத்திலும் திருப்புமுனை இல்லாமல் சுமாராக இருப்பது மற்றும் ஹாலிவுட் படத்தை அப்படியே ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல் காண்பித்து விட்டு அதன் இறுதி கட்ட காட்சிகளில் மட்டும் கோலிவுட் சினிமாவுக்கு ஏற்றார் போல் சற்று சிறு சிறு மாறுதல்களை செய்து ஒப்பேத்தி இருப்பதை தவிர்த்து விட்டு இன்னமும் கூட விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சுவாரஸ்யமான ஒரு படமாக கொடுத்திருக்கலாம். மற்றபடி ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி மாஸ் காட்சிகளுக்காக இந்த படத்திற்கு செல்லாமல் கிளாசான ஹாலிவுட் படம் பார்க்கும் எண்ணத்தோடு செல்பவர்களுக்கு இந்த படம் ஏமாற்றம் அளிக்காது.
மொத்த படத்தையும் தன் தோள்மேல் சுமந்து வழக்கம் போல் படத்தை தாங்கி பிடித்து இருக்கிறார் நாயகன் அஜித் குமார். காதல் காட்சிகளிலும், குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும், ஆக்சன் காட்சிகளிலும் வழக்கம்போல் தனது டிரேட் மார்க் நடிப்பின் மூலம் அதகளப்படுத்தியிருக்கிறார். இவருக்கு உறுதுணையாக நாயகி த்ரிஷா தனக்கு என்ன வருமோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். வழக்கமான நாயகிகள் வழக்கமாக என்ன செய்வார்களோ அதையே இவரும் செய்து இருக்கிறார். வில்லன்களாக வரும் அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோர் மிகவும் டெட்லியான வில்லன்களாக வருகின்றனர். பிற்பகுதி படத்தை அஜித்துடன் இணைந்து இவர்கள் தான் தாங்கி பிடித்துள்ளனர். மற்றபடி படத்தில் முகம் தெரியாத பல்வேறு வெளிநாட்டு நடிகர்கள் அவரவர் வேலையை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ரகம். பின்னணி இசையில் இந்த படத்தை எந்த அளவுக்கு தேற்ற முடியுமோ அந்த அளவுக்கு தேற்றி குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் மிரட்டலான இசையை கொடுத்து தியேட்டரில் விசில் சத்தத்தின் மூலம் அதிர செய்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவில் படம் ஹாலிவுட் தரம். குறிப்பாக கார் ஸ்டண்ட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும் அஜித் படம் என்பதால் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்போடு வெளியாகி இருக்கும் இந்த விடாமுயற்சி திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை ரசிகர்களுக்காகப் பூர்த்தி செய்ததா என்றால் சந்தேகம் தான் என்றே சொல்லத் தோன்றும். ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களுக்காக ஒரு நல்ல ஹாலிவுட் பாணியில் இருக்கும் தமிழ் படம் பார்த்த உணர்வை இப்படம் கொடுக்கிறது என்றால் ஆம் என்று சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவு ஒரு கிரிப்பிங் ஆன ஹாலிவுட் படம் பார்த்த உணர்வை இந்த விடாமுயற்சி படம் கொடுத்திருக்கிறது. இருந்தும் கதை தேர்வு மற்றும் திரைக்கதையில் இன்னும் கூட கவனமாக இருந்திருக்கலாம்.
விடாமுயற்சி - பாசம்!