70 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 5ஆம் தேதி (05.02.2025) ஒரே கட்டமாக நடைபெற்றது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவியது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (08.02.2025) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து கடும் போட்டி நிலவி வருகிறது. அதன்படி மதிய 12.45 மணி நிலவரப்படி பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. முன்னதாக காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகித்த நிலையில் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் விசிக நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஆம் ஆத்மி இந்த அளவிற்குப் பின்னடைவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமேயானால், தேசத்திற்கான ஒரு பின்னடைவாகத் தான் கருத வேண்டியிருக்கிறது. நியாயமான முறையில் டெல்லியில் இந்த தேர்தல் நடந்திருக்கிறதா என்ற ஐயத்தை எழுப்புகிறது. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்த தேர்தலைச் சந்திக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் இது குறித்து தீவிரமாகக் கலந்தாய்வு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்சனையைத் தள்ளி வைத்துவிட்டு நாட்டை, மக்களைக் காப்பாற்றுவதற்கான திசை வழியில் சிந்திக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்லாமல் சட்டப்பேரவைத் தேர்தலும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. ஆகவே டெல்லி தேர்தல் முடிவுகளைப் படிப்பினையாகக் கொண்டு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிகள் இது குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்று விசிக வேண்டுகோள் விடுக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்பார்த்ததை போல் திமுக மிக அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. எதிர்பார்த்த வெற்றியை திமுக கூட்டணி பெறும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.