கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஒரு மாத காலமாகப் பள்ளிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டுக்குச் சென்று, ‘ஏன் பள்ளிக்கு வரவில்லை?’ எனக் கேட்டு அறிந்துள்ளார். அப்போது மாணவி கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மாணவி கர்ப்பம் அடைந்து கருத்தரிப்பு செய்திருப்பதாகப் பெற்றோர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே போலீசார் இது தொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 ஆசிரியர்களைக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு கைது செய்யப்பட்ட 3 ஆசிரியர்களிடமும் டி.என்.ஏ. பரிசோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்' என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அப்போது எடப்பாடி பழனிசாமி பீதியைக் கிளப்புகிறார் என்று சொன்னவர்கள் தற்பொழுது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? திமுக அரசே இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும். வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவரும் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.