சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சரும், திமுகவின் மூத்த அரசியல்வாதியுமான பேராசிரியர் அன்பழகனின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு மார்பளவு சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் அந்த கட்டிடத்திற்கு 'பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில் இதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இபிஎஸ்-ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நந்தனத்தில் ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாக பெயரை மாற்றியது கண்டனத்திற்குரியது. 'அம்மா வளாகம்' என்றிருந்த அலுவலக வளாகத்தின் பெயரை மாற்றம் செய்தது கண்டனத்துக்குரியது. அன்பழகனுக்கு சிலை வைப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் வளாகத்தின் பெயரை மாற்றியது நாகரீகமற்ற செயல். ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது ஒருவரை இழிவுபடுத்தி இன்னொருவரைப் புகழ்வது போன்றது. இதுபோன்ற செயல் தமிழ் பண்பாட்டிற்கு, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது. புதிதாக வேறு மாளிகை அரசால் கட்டப்படும் போது பேராசிரியர் க.அன்பழகன் பெயரைச் சூட்டலாம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா வளாகத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளனர்.