வாக்குப்பதிவின்போது நடக்கவேண்டிய சில பணிகள் குறித்தும் காய்கள் நகர்த்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, வாக்குப் பதிவு மையத்தில் பணியாற்றும் பூத் தலைமை அதிகாரி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அ.தி.மு.க. அனுதாபிகளாக இருக்க வேண்டும் என ஆலோசித்து, அதற்கேற்ப அ.தி.மு.க. ஆதரவு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை பட்டியலிட்டு அதனை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளனர். இதனை செயல்படுத்துவதற்கான ரகசிய ஏற்பாடுகளும் நடந்து முடிந்திருக்கின்றன என்கிற தகவல் தேர்தல் ஆணைய வட்டாரங்களில் பரவிக்கிடக்கிறது.
இதற்கிடையே, நான்கு தொகுதிகளிலுமுள்ள பூத்துகளில் உட்காரவைக்கப்படும் பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் பட்டியலையும் எடுத்துள்ள அ.தி.மு.க. தலைமை, அவர்களை வளைப்பதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளது. இதற்கான அசைன்மெண்டுகளை மூத்த அமைச்சர்கள் கண்காணித்து வருகின்றனர். "அ.தி.மு.க. ஆதரவு அரசு அதிகாரிகள் மற்றும் பூத் ஏஜெண்ட்டுகளின் ஒத்துழைப்புடன், ஒவ்வொரு பூத்திலும் பதிவாகாத வாக்குகளில் கணிசமான வாக்குகளை கடைசி நேரத்தில் பதிவு செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்' என்கின்றனர் அரசு ஊழியர்கள். எதைச் செய்தாவது இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை தடுத்து, தனது ஆட்சியை தக்கவைப்பதே எடப்பாடியின் ஒன்-லைன் அஜென்டாவாக இருக்கிறது.