திருவண்ணாமலை, போளூர் ஒன்றியத்தில் 22 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகள் தலா 10 சீட்டுகளை வென்றுள்ளன. மீதமுள்ள 2 இடங்களில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பாக்கிய லெட்சுமி, மிசியம்மாள் இருவருமே அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். ஒ.செ. ஜெயசுதாவால் ஓரங்கட்டப்பட்டு, சின்னம் கிடைக்காமல் செய்யப்பட்டவர்கள்.
தற்போது சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜெயசுதாவுடன், பாக்கியலெட்சுமி கூட்டாகிவிட்டார். மற்றொருவரான மிசியம்மாளின் கணவர் ஆறுமுகத்திடம் ஜெயசுதா தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியபோது, சேர்மன் பதவி கேட்டிருக்கிறார். இதில் ஒத்துப்போகவில்லை. "அ.தி.மு.க.வில் இணைந்து சேர்மன் ஆகிக்கோ' என்ற அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் நடத்திய பேச்சுவார்த்தைக்கும் ஆறுமுகம் மசியவில்லை. இன்னொருபுறம், போளூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.வி.சேகரன் தரப்பில், "சுயேட்சையாகவே நின்னுக்கோ, வைஸ் சேர்மன் தர்றோம்' என கோரிக்கை வைக்க, "யோசிச்சு சொல்றேன்' என சொல்லிவிட்டாராம். இதனால், இருதரப்பும் ஆறுமுகத்தின் அசைவுக்காக காத்திருக்கிறதாம்.