காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து இன்று சத்தியமூர்த்திபவனில் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். தினேஷ் குண்டுராவ் தலைமையில் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்றத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, “ஆலோசனைக் கூட்டத்தில், விவாதிக்கப்படுவது வெளியே போகக்கூடாது என சொன்னாலும் உடனே ஊடகங்களுக்கு சொல்லி விடுகிறார்கள். நக்கீரன் பத்திரிகைக்கு தகவல் போய்விடுகிறது. இனி ரகசியமாக பேசுவது பத்திரிகைகளுக்குப் போகக்கூடாது” என்று ஸ்ட்ரிக்டாக வலியுறுத்திப் பேசினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “போராட்டங்களால்தான் கட்சியை வளர்க்க முடியும். சமீபத்தில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினோம். கவர்னரை சந்தித்து மனு கொடுக்க சென்றோம். அந்த புகைப்படங்களை கவர்னர் அலுவலகம் ரிலீஸ் செய்யவில்லை. மேலும் சிலரை கவர்னரை சந்திக்கவும் விடவில்லை. இதை கண்டித்து கட்சியின் மகளிர் தலைவர் சுதா சோசியல் மீடியாவில் பதிவு செய்தார். உடனே கவர்னர் மாளிகையில் இருந்து ஒரு அதிகாரி அவரை தொடர்பு கொண்டு பேசுகிறார். அந்த பதிவை நீக்குங்கள் என்கிறார். அதனால் அதிரடியாக இப்படி பதிவு செய்தால்தான் கவர்னர் மாளிகையே பயப்படுகிறது” என்றார்.
செல்வப்பெருந்தகை உட்பட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பேச்சை சேகரித்து மேலிடத்துக்கு அனுப்பியிருக்கிறது உளவுத்துறை.