துணை முதல்வர் ஓ.பி.எஸ். மேற்கொண்டிருக்கும் அமெரிக்கப் பயணம் எடப்பாடிக்கு டென்ஷனை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இப்படியொரு டூர் போனால் சூடேற்றாமல் இருக்குமா என்று கட்சிக்குள் பேசி வருகின்றனர். அரசு முறைப் பயணமாக அதிகாரிகள் சிலருடன் அமெரிக்கா டூருக்கு ஆயத்தமான ஓ.பி.எஸ்., முதலில் தன் மனைவியை மட்டுமே அழைத்துச் செல்வதாக திட்டம் போட்டதாக சொல்லப்படுகிறது. கடைசி நேரத்தில்தான் தன் மகனான ரவீந்திரநாத் எம்.பி.யை யும் அழைத்து சென்றுள்ளார். அதனால் தீவிரமாக ஆலோசித்த எடப்பாடி, ஓ.பி.எஸ்.சுக்கு செக் வைக்க, அவருக்குப் பிடிக்காத அதிகாரியான நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணனையும், அவர் கூடவே அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்கா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஓ.பி.எஸ்., அங்கெல்லாம் தனக்குத் தரப்படும் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் தன் மகன் ரவீந்திரநாத்துக்கும் தரவேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்து நிறைவேற்றியதை தெரிந்து கொண்ட எடப்பாடி, எரிச்சலாகியிருக்கிறார். சிகாகோ உலகத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் மைக் பிடித்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், நான் மோடியின் பூமியில் இருந்து உங்களை சந்திக்க வந்திருக்கேன் என்று பெருமிதமாக பிரகடனம் செய்தார். இதுவும் எடப்பாடிக்கு வாட்ஸ்ஆப் வீடியோவாக சென்றுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெ. பெயர்களை மீறி மோடி பெயரைச் சொல்லி, டெல்லியைக் கவர கணக்குப் பண்ணுவதைப் பார்த்து அப்பா மேலேயும் மகன் மேலேயும் எடப்பாடி டென்ஷனாயிட்டதாக கூறுகின்றனர். அமெரிக்காவில் தங்கத் தமிழ்மகன், ரைசிங் ஸ்டார்னு ஓ.பி.எஸ்.ஸுக்கு விருதுகள் வழங்கப்பட்டதும் இங்கே டென்ஷனை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.