Skip to main content

“ஆதீனம் மீதல்ல காவி துண்டு மீது கை வைத்தால் கூட விடமாட்டோம்..” - எச்.ராஜா ஆவேசம் 

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

H Raja spoke about minister sekar babu

 

தேனி மாவட்ட பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தேனி பங்களா மேட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எச்.ராஜா கலந்து கொண்டார்.

 

இதில் பேசிய அவர், “அமைச்சர் சேகர்பாபு, மதுரை ஆதீனத்தை மிரட்டுகிறார். ‘முதல்வர் அடக்கி வைத்துள்ளதால் தான் அமைதியாக இருக்கிறோம்’ என்கிறார். அமைச்சர் நாவை அடக்கிப் பேச வேண்டும். ஆதினத்தை மட்டுமல்ல, காவி துண்டு அணிந்தவர்களை சீண்டினால்கூட விடமாட்டோம். மதுரை ஆதீனம் தலைமையை ஏற்று அவரின் பின்னே பாஜகவினர் நிற்பார்கள். 


கோயில் நிலங்களை மீட்கிறோம் என்கிறார். ஆனால் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள க்யூன்ஸ் லேண்ட் அகற்றப்படவில்லை. அவர்களிடம் இருந்து ஒன்பதரைக் கோடி வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். அதையும் வசூலிக்கவில்லை. முதலில் திமுக காலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட கட்டடங்களை அகற்றுங்கள்.


இந்து அறநிலைய சட்டத்தை அமைச்சர் படிக்க வேண்டும். அதில் ஏதாவது கோயில் நிர்வாகத்தில் தவறு இருந்தால் அதைச் சரி செய்து மீண்டும் அந்தக் கோயில் கமிட்டியிடம் வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு திமுக அரசு நடக்கவில்லை. தமிழ் வளர்க்கிறோம் எனக் கூறிக் கொண்டு, தமிழின விரோதிகளாக திமுகவினர் உள்ளனர். இவர்களால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தமிழர்கள் மைனாரிட்டி ஆவார்கள். 


தமிழகத்தில் மதுவை அறிமுகம் செய் துவைத்து தமிழர்களை குழந்தை பெற்றுக் கொள்ளக் கூட முடியாத அளவிற்கு மாற்றியுள்ளனர். மது விற்பனையால் கிடைக்கும் 36 ஆயிரம் கோடி ரூபாயில் தான் அரசாங்கத்தை நடத்தி கொண்டிருக்கின்றனர்.

 
சிதம்பரத்தில் 1867ல் சவுத் ஆர்காடு டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் சிதம்பரம் கோயில் சொத்து தீட்சிதர்களுக்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டுள்ளார். 2010ல் கோயில்கள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சைவ, வைணவக் கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராது எனக் குறிப்பிட்டுள்ளது. சட்டவிதிகளை மீறி அறநிலையத்துறை செயல் அலுவலர்களை நியமித்துள்ளது. தற்போது வரை அறநிலையத்துறை 10 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளது. எனவே கோயில்களை விட்டு அரசு வெளியே செல்ல வேண்டும்.


திமுக அரசு இதுவரை எந்தத் திட்டத்தையும் வழங்கவில்லை. ஸ்டிக்கர் ஒட்டுவது தான் அவர்களுடைய சாதனையாக உள்ளது. இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கேட்டால் இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது செய்வோம் என்கிறார்கள். அதற்குள் தமிழகத்தில் மக்கள் வீதிக்கு வந்து திமுக அரசைத் தூக்கி எறிவார்கள்” என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்