டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் நேற்று (21.01.2021) தஞ்சாவூரில் பச்சைக் கொடி பேரணி நடைபெற்றது.
11.30 மணி அளவில் பேரணியைத் தொடங்கி வைத்து பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, “கடந்த 10 நாட்களாக பெய்த தொடர் மழையால் விவசாய நிலங்கள் மூழ்கி விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அந்த இழப்பு மற்றும் சோகத்தையும் கடந்து பல்லாயிரக்கணக்கானோர் இங்கு திரண்டுள்ளனர். இது தமிழக மக்களின் உணர்வை வெளிக்காட்டுகிறது.
மத்திய அரசு சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைக்கிறோம் என சொல்கிறது. இது போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரமாகும். சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும்,” என்றார்.
தஞ்சையில் இதுவரை இல்லாத அளவில், ரயில்வே ஸ்டேஷன், பழைய பேருந்து நிலையம் வழியாக பேரணி செல்ல அனுமதிக்கப்பட்டதால், வழியெங்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று ஆதரவளிக்கும் வகையில் கைகளை அசைத்து பேரணியினரை உற்சாகப்படுத்தினர்.
ரயிலடி அருகே திருச்சி மாவட்ட மஜக பொறுப்பாளர் மெய்தீன் தலைமையில் விவசாய அணியினர், பேரணியில் வந்தவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினர். ஆற்றங்கறை பள்ளி அருகில் தஞ்சை மாநகர் மாவட்ட மஜக செயலாளர் அகமது கபீர் தலைமையில் மஜக விவசாய அணியினர் மோர் விநியோகித்தனர். நிறைவாக ராஜராஜ சோழன் சிலை அருகில் பேரணி மதியம் 1.30 அளவில் வந்து சேர்ந்தது. அப்போது தாமதமாக வந்த நாகை மாவட்ட விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவிரி தனபாலன் தலைமையில் வந்து சேர்ந்தனர்.
காவிரி உரிமை மீட்புக் குழு தலைவர் பெ.மணியரசன், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, காவிரி தனபாலன், மருத்துவர் பாரதி செல்வன், மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி, தமிழ் விடுதலை புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட தலைவர்கள் அடுத்தடுத்து உரையாற்றினர்.
நிறைவாக மதியம் 2 .15 மணி அளவில் பேரணி முற்றுபெற்றது. அப்போது திலகர் திடலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் திரும்பி புறப்படவிருந்தவர்களுக்கு, மஜக சார்பில் மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. 3 மணி நேரம் டெல்லி திரும்பிப் பார்க்கும் வகையில் முழக்கங்களோடு அதிர்ந்த பேரணி அமைதியாக நிறைவுற்றது.