சேலம் மாவட்டத்தில், அ.தி.மு.க பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டது. ஊழல் செய்து சிறைக்கு சென்றவரை தியாகம் செய்தவர் என்று சொல்வது வெட்கக்கேடு. தமிழ்நாட்டில், கொலைகள் நடக்காத நாட்களே இல்லை. தி.மு.க அரசு விழித்துக் கொள்ளாமல் கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. போதைப் பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்து 40 மாதங்கள் ஆனபோதிலும் 10% வாக்குறுதிகளை கூட அரசு நிறைவேற்றவில்லை. கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை. தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டபோதிலும் இதுவரை வெளியிடவில்லை.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைதாகி சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, ஜாமீன் வழங்கக் கோரி பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தினார். அந்த வகையில், செந்தில் பாலாஜிக்கு கடந்த 26ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.