அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாடு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி பல சிக்கல்களுக்கு இடையில் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் பணியாற்றிய குழுவினர்களை சென்னையில் அழைத்து எடப்பாடி பாராட்டியுள்ளார். அதில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை வெற்றிபெற முழுமையாக உழைக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 20 நடைபெற்றது. இதில், அ.தி.மு.க வைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். அதில், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், மதிய உணவில் சில பிரச்சனைகள் இருந்ததால், மாநாடு சலசலப்புகளை சந்தித்தது. இந்நிலையில், அந்த மாநாட்டில் பணியாற்றிய குழுவினர்களை, சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. அலுவலகத்திற்கு அழைத்து எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். நிகழ்வில், அவருக்கு நினைவுப்பரிசையும் கட்சியினர் வழங்கியுள்ளனர். பின்னர், மாவட்டச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள், எம்.எல்.ஏ., எம்.பி. கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், எடப்பாடி, " ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சூழல் உருவாகி வருவதால், தேர்தலுக்கு ஆயத்தமாக" கட்சியினரை அறிவுறுத்தினார். தொடர்ந்து, அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற உழைக்க வேண்டும் எனவும் பேசினார்.
நிகழ்ச்சி முடிந்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “தி.மு.க விற்கு மக்களிடம் அதிருப்தி நிலை ஏற்பட்டிருக்கிறது. மாறாக, அ.தி.மு.க.வின் மீது மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. மக்களும் அடுத்த தேர்தல் வரும் நாளை நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில், தி.மு.க. பல தொகுதிகளுக்கு செல்ல முடியாத சூழலும் நிலவி வருகிறது. அதேசமயம், 'ஆட்சி போனாலும் கவலையில்லை' என அமைச்சர் உதயநிதி பேசுகிறார். இருந்தாலும் இந்த தி.மு.க. ஆட்சி 2024 தேர்தலுக்கு முன்பே ஆட்சியை இழந்துவிடும். எனவே, மக்களுக்கு விருப்பமில்லாத ஆட்சி இழக்க வேண்டிய ஆட்சிதான். தொடர்ந்து தமிழ்நாட்டில், தி.மு.க. ஆட்சியில், மின் கட்டணம், வீட்டு வரி, சொத்துவரி, பதிவுக் கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளது. இது போன்று நிறைய பிரச்சனைகள் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.
இதற்கு உதாரணமாக, ரோம் நகரம் தீயில் எரிகின்ற சமயத்தில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததை போலத்தான் சனாதன பிரச்சனையை எழுப்பி மக்களை திசை திருப்பியுள்ளது தி.மு.க. மத உணர்வுகளை இழிவுபடுத்துவது தவறுதான். இதற்கு, இஸ்லாமிய அமைப்புகள் கூட கண்டனம் தெரிவித்தது. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க.விடம் சமத்துவம் இருக்கிறதா? ஏன், இந்தியா கூட்டணியில் இருக்கும் டி.ராஜா, சீதாரம் யெச்சூரி அவர்களை தலைவராக நியமிக்கலாமே? சொல்லப் போனால், அ.தி.மு.க தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை பொது தொகுதியில் நிற்கவைத்து வெற்றிபெறவும் வைத்தது. எனவே, எங்கள் ஆட்சி காலத்தில்தான் சமத்துவம் இருந்தது” என அவர் பேசியுள்ளார்.