திருவண்ணாமலை தி.மு.க. வடக்கு மா.செ.வாக இருப்பவர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம். ரியல் எஸ்டேட், பைனான்ஸ் என சிலப்பல தொழில்கள் செய்யும் இவரது மகன் பாபுவுக்கு 2016-ல் ஆரணி தொகுதியில் எம்.எல்.ஏ. சீட் வாங்கிக் கொடுத்தார். தேர்தல் செலவுக்காக கரூரைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனத்தில் நில ஆவணங்களைக் கொடுத்து கடனாக ரூ.5 கோடி வாங்கியுள்ளார்.
தேர்தலில் மகன் தோற்றுப்போனார். பொருளாதார நெருக்கடியும் தொற்றிக்கொள்ள, கடன் கொடுத்தவர்களுக்கு சிவானந்தம் போக்குக்காட்டி வந்தார். சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை எஸ்.பி. சிபிசக்கரவத்தியிடம், கடன் கொடுத்தவர்கள் தரப்பு மோசடிப் புகார் கொடுத்தது. இதையடுத்து, பிப்ரவரி 06 ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்கள் ஆரணியில் உள்ள சிவானந்தத்தின் வீட்டுக்கதவைத் தட்டினர்.
தூக்கத்தில் இருந்து எழுந்துவந்த சிவானந்தம், தனக்கு பழக்கமான அந்த இன்ஸ்பெக்டரிடம், "என்ன இந்த நேரத்தில் என்று கேட்க, டி.எஸ்.பி. கார்ல இருக்காரு. உங்ககிட்ட பேசணும்னு சொன்னாரு' என்று கூட்டிச் சென்றார். அங்கு அவரை காருக்குள் ஏறச்சொல்லி திருவண்ணாமலை நோக்கிப் பறந்தனர். தெற்கு மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு பேசியதால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துள்ளார் சிவானந்தம். இரண்டே மாதத்தில் பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக் கொடுத்தபிறகே, அவர் அனுப்பி வைக்கப் பட்டார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க.வினர், "அந்த கரூர் பைனான்ஸில் தி.மு.க., அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர்களின் கறுப்புப்பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுதான் வட்டிக்கு தரப்படுகிறது. சிவானந்தம் விசாரணைக்குக் கூட்டிச்செல்லப்பட்டதன் பின்னணியில், வலுவான தி.மு.க. முக்கிய மா.செ. இருக்கிறார்'' என்றனர்.