தமிழகத்தில் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி கட்டணம் உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கட்சி பொறுப்பாளரும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில் முன்னாள் வனத்துறை அமைச்சரும், அதிமுக பொருளாளருமானா சீனிவாசன் கலந்துகண்டு பேசினார். அதில், மின் கட்டணம் மற்றும் சொத்து வரி ஆகியற்றை உயர்த்தியது தொடர்பாக ஆளும் கட்சியை கண்டித்து பேசினார். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மாணவி, நீட்தேர்வுக்கு பயந்துதான் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
அதைத் தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியை பார்க்க மறுத்ததாக கேள்வி எழுப்பினர். அதற்கு சீனிவாசன், “நாடே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பொழுது பிடில் வாசித்த கதையாக டெல்லியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது, பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது அப்பொழுது பிரதமரை பார்த்து பேசி விட்டார். எங்களிடம் உடனடியாக திரும்பி வந்து விடுவேன் என கூறித்தான் சென்றார். அதன்படி நேற்று வந்து விட்டார். பழனிச்சாமி டெல்லியில் நான்கு நாட்கள் தங்கி யாரையும் பார்க்கும் திட்டம் கிடையாது” எனகூறினார்.
உதய்மின் திட்டத்தில் அதிமுக அமைச்சர் கையெழுத்து இட்டதன் காரணமாகத்தான் தற்பொழுது தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்த வேண்டிய சூழ்நிலை உள்ளது என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது தொடர்பான கேள்விக்கு, “இந்த திட்டத்தினை நாங்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அதன் காரணமாகத்தான் கடந்த 10 வருடமாக தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை” என கூறினார்.
மேலும் சில கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “திமுகவின் கிளை கட்சியாக ஓபிஎஸ் அணி செயல்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் கூறியது போல், தொண்டன் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நான்கு மாதம் கழித்து அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். கட்சி தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு போட்டியிடலாம். அரசியல் ஆண்மை இருந்தால் ஓ.பி.எஸ்-ஐ போட்டியிட சொல்லுங்கள்.
ஓ.பி.எஸ்., உச்சநீதிமன்றம் முதல் எல்லா பக்கமும் கடிதம் கொடுத்துக் கொண்டு வருகிறார். வெற்றி எடப்பாடிக்கு வந்து கொண்டே உள்ளது. அது போல் நல்ல செய்தி வரும்.
யார் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றமே. மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை செய்வதாக இருந்தால் அதனை ஏற்றுக் கொள்வோம். அவ்வாறு இல்லை என்றால் யாராக இருந்தாலும் எதிர்ப்போம்” என்று கூறினார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ராஜசேகர், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதி முருகன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாநகரப் பகுதி செயலாளர்கள் வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.