சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கிறிஸ்துவர்களாக மாறிய ஆதிதிராவிட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தனித் தீர்மானத்தை சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார்.
பின்னர் ‘இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறிஸ்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி அவர்களும் அனைத்து வகையில் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வருமாறு இந்திய அரசை வலியுறுத்தி' தீர்மானத்தை முன்மொழிந்தார். தொடர்ந்து சட்டப் பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே இந்த தீர்மானத்தை வரவேற்றுப் பேசிய இனிகோ இருதயராஜ், “இது தீண்டாமை பற்றிய தீர்மானம் அல்ல. அரசியலமைப்பு தந்துள்ள சலுகைகளை, இட ஒதுக்கீட்டை, உரிமைகளை பெறுவதற்குத்தான் இந்த தீர்மானம். கடந்த 72 ஆண்டுகால போராட்டத்தில் எங்களுக்கு இன்றுதான் விடியல் கிடைத்திருக்கிறது. ‘ஸ்டாலின்தான் வராரு... விடியல் தர போறாரு...’ என்பது போல் ஆதிதிராவிடர்கள் விடியல் பெற்ற நாளாக இந்த நாளை உருவாக்கி தந்திருக்கிற முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன் கடவுளிடம் இந்த கோரிக்கையை வைத்திருந்தோம். ஆனால் திராவிட மாடல் ஆட்சியில்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கிற்கு உதவியாக இருக்கும். எங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த முதல்வருக்கு, “நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு..” என்று பாடி கோடான கோடி நன்றி” என்றார்.