Skip to main content

“நீதிபதிகள் நியமனம் முறையாக நடப்பதில்லை” - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/02/2025 | Edited on 17/02/2025

 

Retired Judge Chandru says Judges appointment is not done properly 

ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு மற்றும் அரிபந்தாமன் ஆகியோர் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (17.02.2025) கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேசுகையில், “நீதிபதிகள் நியமனம் தொடர்பான புதிய நடைமுறையில் ஒரு மாநிலத்திலிருந்து யாரும் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றுகிறார்களோ அவரையும், அவருடைய அவருடைய கருத்தையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான நீதிபதியை கன்சல்டிங் ஜார்ஜ் என்றும் சொல்கிறார்கள். அதாவது அவரை ஆலோசனை வழங்கக்கூடிய நீதிபதி  என்று குறிப்பிடுகிறார்கள். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய பெயர்களை அதற்குச் சிபாரிசோ பரிந்துரையோ குறிப்போ அங்குள்ள நீதிபதிகளான சுந்தரேஷ் மற்றும் மகாதேவனுக்கும் பொறுப்பு இருக்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் நடைபெறவில்லை. முன்பு, நீதிபதிகள் நியமனத்துக்கு உறுப்பினர்கள் கொண்ட நிரந்தர அமைப்பு இருந்தது. நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்படுவதில்லை. இது நன்றாகவே தெரிகிறது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக 34 % பேர் பிரமாண சமுதாயத்தினராக உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் சுமார் 10 % உள்ளவர்களுக்கு மட்டுமே  நீதிபதிகள் நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீதிபதிகளுக்கான பணியிடங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.  போன்ற பிரிவினருக்குப் போதிய அளவில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. நாடு முழுவதும் உள்ள நீதிபதி பணியிடங்களில் ௭௯ % உயர் சமூக மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன்படி பார்த்தால், நீதிபதிகளின் நியமனம் முறையாக நடப்பதில்லை எனத் தெரியவருகிறது. உச்ச நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்ற வழிகாட்டுதல் படி நீதிபதிகள் நியமனம் நடப்பதில்லை என்பது தெளிவாகிறது. நீதிபதி நியமனமானது ஒரு சில குழுக்களிலிருந்து நியமிக்கப்படாமல் நாடு முழுவதும் பரவலாக நியமனங்கள் மூலம் நடைபெறவேண்டும். பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நீதிபதிகள் நியமனத்தில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். கேரளத்தில் 74 % அளவுக்கு கீழமை நீதிமன்றங்களில் பெண்கள்தான் நீதிபதிகளாக இருந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட உச்ச நீதிமன்றத்து நீதிபதிகளாக வரவில்லை” என்றும் குற்றம் சாட்டினார். 

சார்ந்த செய்திகள்