காமராஜர் பிறந்தநாள் இன்று (ஜூலை 15) தமிழக அரசால் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாளில் சாதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது கண்டனத்திற்குரியது. இன்று காலை கூட பிரதமர் மோடி காமராஜருக்கு வாழ்த்து செய்தி ஒன்றை ட்விட்டரில் போட்டுள்ளார் பார்த்திருப்பீர்கள். அதில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர் என்று கூறியுள்ளார்.
அதைப்போன்ற ஒரு எளிய ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும். இப்போதெல்லாம் திமுக மினிஸ்டர்களின் ஃபேவரைட் டைம்பாஸ் என்னவென்றால் செல்லமாக அடிப்பதுதான் என்கிறார்கள். அடிப்பதை எல்லாம் பார்த்திருக்கிறோம் ஆனால் தமிழ்நாட்டில்தான் செல்லமா தட்டுறது, செல்லமா அடிப்பதை எல்லாம் பார்க்கிறோம். ஒரு பேப்பர எடுத்து ஏழைத்தாயின் தலையில டம்முன்னு ஒரு கொட்டு. அதை பாஜக மக்களிடம் எடுத்து சொன்னால் செல்லமாக அடித்தார்னு அவரையே பேட்டி கொடுக்க சொல்கிறார்கள்'' என்றார்.
அண்மையில் பேரிடர் மீட்புப்பணித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மனுகொடுக்க வந்த பெண் ஒருவரை பேப்பரால் அப்பெண்ணின் தலையில் அடித்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.