‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ சுற்றுப் பயணத்தை முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கினார்.
அதற்கு முன்பு திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பெரியசாமி, “கரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி சிந்திக்காத அரசு அ.தி.மு.க அரசு. மக்கள் மத்தியில் வாக்குகள் கேட்க என்ன உரிமை இருக்கிறது. ஏழை எளிய மக்கள் கரோனாவால் இறந்தார்கள். அதை எட்டிக்கூடப் பார்க்காத அ.தி.மு.க., மக்களிடம் வாக்குக் கேட்க என்ன உரிமை இருக்கிறது.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியினர், மக்களிடத்தில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்கவே நடக்காது. மக்களுக்கு நன்றாகவே தெரியும். மக்களுக்காக உழைக்கக் கூடிய கட்சி எது என்று. ஆகவே, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றிபெறும். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும். மு.க.ஸ்டாலின், முதலமைச்சராகப் பதவியேற்பார்.
கரோனா பரிசோதனை கருவிகள் வாங்குவதில் ஊழல் செய்து கொள்ளை அடித்த ஆட்சி எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. ஆட்டுக் கொட்டகை, மாட்டுக் கொட்டகை போட்டது என அனைத்திலும் ஊழல், லஞ்சம். அரசுப் பேருந்தில் ஸ்டிக்கர் ஒட்டியதில் ஊழல், இதற்கு எல்லாம் தி.மு.க ஆட்சி வந்தபின்பு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.
தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு ஒரு சட்டம். ஆளுங்கட்சியினர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். கூட்டத்தைக் கூட்டலாம். ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள கட்சியினர் நேற்று ரயிலை மறிக்கிறார்கள், பேருந்தை மறிக்கிறார்கள், ரயில் மீது கல்லெறிந்தார்கள். ஆனால், அவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை” என்று கூறினார்.
இதில், மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி, முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் தண்டபாணி நாகராஜன் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.