Published on 04/02/2020 | Edited on 04/02/2020
2011-15 கால கட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு செந்தில்பாலாஜி அரசியல் பழிவங்கும் நடவடிக்கை என்று கூறியிருந்தார்.
![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/NQNbqhqop8PkhqndLlac6i679G8KXk75JUTblK_Y6uI/1580801765/sites/default/files/inline-images/446_0.jpg)
இந்த நிலையில், எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் பொதுகூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அதிமுகவினரால் நடத்தப்பட்டு வருகிறது. கரூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன் பேசும் போது, நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி என போலியான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினார்கள். உண்மையை புரிந்து கொண்ட மக்கள் இடைத்தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவை வெற்றிபெற செய்தார்கள்' என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் செந்தில்பாலாஜி உறவினர்களோடு சேர்ந்து கொண்டு அரசுவேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதால் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார் கொரோனா வைரஸ் எனப்படும் செந்தில்பாலாஜி. சென்னையில் வீட்டையெல்லாம் சீல் வைத்துவிட்டார்கள். அதிமுகவின் சாபம் அவரை சும்மா விடாது' என்றும் கூறினார்.