தே.மு.தி.கவின் 16 ஆவது ஆண்டு துவக்க நாள் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி காலை, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.கவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த், கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியின்போது புதிதாக 100 இளைஞர்கள் தே.மு.தி.க.வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அவரை தொடர்ந்து விஜய பிரபாகரனும் உரையாற்றினார். அப்பொழுது அவர், “தேமுதிக தேசிய கட்சியாக வளரும். அதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். இன்று வெறும் 100 இளைஞர்கள் கட்சியில் இணைந்ததாக நான் கருதவில்லை 100 குடும்பங்கள் தே.மு.தி.கவில் இணைந்ததாக கருதுகிறேன்.
'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்பது கேப்டனின் முழக்கம். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 100% வேலை வாய்ப்பை தந்திருந்தால் தமிழர்கள் வெளியே சென்றிருக்க மாட்டார்கள். 2021ல் எங்க அப்பா தான் கிங். பிறந்ததிலிருந்து எனக்கு அவர் கிங்காக தான் இருந்திருக்கிறார். ‘இந்தி தெரியாது போடா’ என்று பலரும் தவறாக பேசி வருகிறார்கள். அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம் என்பது கேப்டனின் இலக்கு. என்னை விஜயகாந்த் மகனாக பார்க்காதீர்கள், என்னை ஒரு தோழனாக குடும்பத்தில் ஒருவனாக மச்சானாக, மாமனாக, சகோதரனாக பாருங்கள். பொதுக்குழு செயற்குழு கூடி தேர்தல் நேரத்தில் உரிய முடிவை அறிவிப்போம்” என்று அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியின்போது தே.மு.தி.க. நிர்வாகிகள், கடந்த இரண்டு வருடமாகவே விஜய பிரபாகரன் கட்சி செயல்பாடுகளில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராக இருந்துவருகிறார். அவருக்கு பொறுப்பு வழங்கினால் நிச்சயம் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.