நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான குழு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் குழுவுடன் இன்று (28.01.2024) மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. திமுக குழுவினருடன் காங்கிரஸ் சார்பில் 5 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் திமுக தனது கூட்டணிக் கட்சிகளில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.
இந்நிலையில் சென்னை காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் 21 மக்களவை தொகுதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மக்களவைத் தேர்தலின் போது போட்டியிட்ட 9 தொகுதிகள் உள்ளிட்ட 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த முறை போட்டியிட்ட திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளுடன் புதியதாக திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென்சென்னை, அரக்கோணம் 21 ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 9 தொகுதிகளில் தேனியைத் தவிர்த்து மற்ற 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வீழ்த்தி அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.