மராத்திய இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற அமர்வு, அண்மையில் வழங்கிய தீர்ப்பு - சமூகநீதிக்கு - இடஒதுக்கீட்டுக்கு எதிரான பேராபத்தை விளைவிப்பதாகும். இதுவரை பெற்றுவந்த உரிமைகளை எல்லாம் தகர்ப்பதாகும். இந்த பேராபத்திலிருந்து சமூகநீதி பறிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட தமிழ்நாடு அரசும், எம்.பி.க்களும், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடி சமூகநீதியை மீட்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக் கூறப்பட்ட சமூகநீதி சம்பந்தமான வழக்கு - மராத்திய மக்களுக்கான இடஒதுக்கீடு (மராத்திய அரசு நிறைவேற்றிய சட்டம் சம்பந்தமானது) வழக்கில், 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்டப் பிரிவு அமர்வு மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி மராத்திய இடஒதுக்கீடு சட்டம் 50 விழுக்காட்டிற்கு மேல் இருப்பதாலும், மண்டல் வழக்கில் 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தபடி, 50 விழுக்காட்டிற்கு மேற்பட்டு இடஒதுக்கீடு அமையுமானால், அது தனி விதி விலக்குக்குரியது என்பதை - போதிய ஆதாரத்துடன் விளக்குவதாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கலாம் என்ற நிபந்தனைக்கு உகந்ததாக மராத்திய ஒதுக்கீடு அமையவில்லை என்று கூறி, அது செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.
மாநில அரசுக்கு உரிமை இல்லையாம்:
இதில் மற்றொரு முக்கியமான சமூக நீதிக் கொள்கையையும், பறிக்கப்பட்ட மத்திய அரசின் 102ஆம் அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் 342A பிரிவையும் விதியையும் சுட்டிக்காட்டி, அதன்படி, இனி, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் உரிமை மாநில அரசுகளுக்குக் கிடையாது; காரணம் அந்த அரசமைப்புச் சட்டத் திருத்தம் 102-இல் உள்ள 342A என்ற புதிதாக இணைக்கப்பட்ட பிரிவு, ‘சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும்‘ பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு சேர்க்கும் உரிமை - வரையறை செய்வது நாடாளுமன்றத்தையும் குடிஅரசுத் தலைவரையுமே - அதாவது மத்திய (டில்லி) அரசினை மட்டுமே சார்ந்த ஒன்று என்பதாக 3-2 என பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
இதனால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளும்; சமூகநீதிக்கான - மாநிலங்களின் உரிமைப் பறிப்பும் மிகவும் மோசமானதாக - இனிமேல் மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அதற்கேற்ப உள் ஒதுக்கீடுகள் உட்பட எதையும் கொடுப்பதற்கு எந்த உரிமையும் அற்றவைகளாகவே ஆகக் கூடும்.
முதலாவது சட்டத் திருத்தம் காணாமல் போகும் நிலை
ஏற்கெனவே 1951ல் தந்தை பெரியார் போராடி, பிரதமர் நேருவும், சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரும், நாடாளுமன்றமும் கல்வியில் இடஒதுக்கீடு செய்ய பிற்படுத்தப்பட்டவர்களுக்கென - சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும், (Socially and Educationally) என்று அடையாளப்படுத்திய வரைமுறையைத் தந்த முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தமும், அதனால் விளைந்த அத்துணைப் பயன்களும் காணாமற் போகச் செய்யும் - பறிமுதல் செய்யும் பேராபத்தான நிலையே இன்று ஏற்பட்டுள்ளது.
102ஆம் சட்டத் திருத்தம் தொடர்பாக செலக்ட் கமிட்டியில் நாம் கூறிய கருத்து;
இது மராத்திய மாநிலத்தின் சட்டத்தை மட்டும் செல்லுபடியற்றதாக்கவில்லை. கூடுதலாக 102ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்போது - (மத்திய) தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட வலிமை வேண்டும் என்று கோரப்பட்ட போதே - வரைவு (Bill) நிலையில், அது மாநிலங்களவையில் செலக்ட் கமிட்டிக்கு விடப்பட்டபோது, அந்தக் குழு நம்மையும் (கி.வீரமணி) கருத்துக்கூற அழைத்தபோது, நாம் நேரில் சென்று, பூபேந்திரயாதவ் எம்.பி. தலைமையிலான அக்குழுவில் இதனை விளக்கி எழுத்துப் பூர்வமாகவே விளக்க அறிக்கையும் தாக்கல் செய்தோம்.
அந்த செலக்ட் கமிட்டி உறுப்பினர்களான - தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி (தி.மு.க.), டி.கே. ரங்கராஜன் (மா.கம்யூ), அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் எம்.பி., ஆகியோரும், மற்ற மாநிலத்தினரும் செலக்ட் கமிட்டியில் கூறிய பரிந்துரையை (நம்மால் கருத்துரைக்கப்பட்ட பரிந்துரை அது) மத்திய அரசு அத்திருத்தத்தை நிறைவேற்றும் போது அதை நிராகரித்து, இந்த உரிமையை தங்கள் வழியில் அதிரடியாக நிறைவேற்றியது. அதனுடைய கொடும் விளைவுதான் இந்த சமூகநீதி சம்பந்தமான மாநில உரிமை - பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளப் படுத்த இடஒதுக்கீடு செய்யும் உரிமை; இதில் 342A பிரிவு போன்றவைகளால் பறிக்கப்பட்ட இன்றைய பெரும் ஆபத்தான நிலை!
இந்த ஆபத்து - பேராபத்து மட்டுமல்லாது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானமான 15(4) மற்றும் 16(4) உரிமைகளையே தகர்த்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறிமுதல் செய்யும் அதிர்ச்சிக்குரியது ஆகும்.
சமூகநீதி மண்ணின் விடியல் ஆட்சி மலர்ந்துள்ள மண்ணின் முதல் முழு முதல் கடமை;
இதுபற்றி சமூகநீதி மண்ணான தமிழ்நாடுதான் முதல் கண்டனத்தை எழுப்பி, அப்பிரிவை நீக்கி, பழையபடி (Statusquo Ante) மாநிலங்களுக்குள்ள பிற்படுத்தப்பட்டோரை கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அடையாளப்படுத்திடும் மாநில உரிமைகளை நிலை நாட்டி, அதனைப் பாதுகாக்க முன் வர வேண்டியது அவசரமான முன்னுரிமைப் பணிகளில் முதன்மையானதாகும்.
தமிழ்நாட்டில் மலர்ந்துள்ள விடியல் ஆட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண - கரோனாவுக்கு முன்னுரிமை கொடுப் பதைப் போல, இதற்கும் முக்கியத்துவம் கொடுத்து, வருகின்ற சட்டமன்றத் தொடரிலேயே ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பிடும் பணியைச் செய்திட வேண்டும். மேலும் திமுக - தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிடவும், மற்ற மாநில முதல்வர்களிடையே இதுபற்றிய ஆபத்தினை விளக்கி, மாநில உரிமைப் பாதுகாப்பினை ஏற்படுத்தவும் உடனடியாக ஏற்பாடுகள் செய்து, காணொலி மூலமாகவாவது அனைத்துக் கட்சி கூட்டத்தினையும் கூட்டி, ஒருமித்த தீர்மானத்தையும் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பிட ஏற்பாடு செய்தல் வேண்டும்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு இப்பிரச்சினையில் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை. எனவே அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ‘மாநில உரிமை - சமூகநீதியினைப் பாதுகாப்போம்‘ என்ற குரலை வலிமையாக எழுப்ப வேண்டும்.
கரோனாவைவிட ஆபத்தானது- அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து பேராபத்தினைத் தடுப்போம்!
கரோனா ஆபத்தைவிட இது உயிர் மூச்சுக் காற்றாம் இடஒதுக்கீட்டைப் பறித்திடும் பேராபத்தினைத் தடுத்து நிறுத்த வேண்டும்! மத்திய அரசின் வெறும் வாக்குறுதிகளால் பயனில்லை. சட்ட ரீதியான பாதுகாப்பும் இருக்க வேண்டும் - அதுதான் சரியான வழி! பிற்படுத்தப்பட்ட மக்களை சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் அடையாளம் காணும் தகுதியும், வரலாற்றுப் பின்னணியும் மாநிலங்களுக்கே உள்ள தனிப் பெரும் உரிமையாகும்; காரணம் மக்கள் நேரடியாக ஆளும் மாநிலங்களுடன்தான் இருக்கிறார்கள். மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும் தன்மையதும் இப்பிரச்சினையில் உண்டு.
விரைந்து செயல்பட வேண்டுகிறோம். தமிழக முதல்வரும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தப் பேராபத்தினைத் தடுக்க உடனே முன் வருக! வேகமாக செயல்படுக என வேண்டுகிறோம்.